தமிழகத்தில் கடந்த சில காலமாகவே முக்கிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டும், அவமதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை மர்ம நபர்கள் ஊற்றினர். அதேபோல், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்டது. இதனால் பலர் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். அதன் பின்னும், அண்ணா சிலை அருகே காவிக்கொடி வைக்கப்பட்டது. இந்த செயல்கள் அதிகளவில் தொடர்ந்து நடந்து வருவதாக காவல்துறையிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. 

கருப்பர் கூட்டம் கந்தசஷ்டிகவசம் குறித்த வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர், அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலை மீது காவிக்கொடி கட்டுவதும் காவி சாயம் பூசுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையின் சார்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொருநாளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.  
 
இந்நிலையில் இன்று திருவள்ளூரில் மீண்டும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.  இந்த நிகழ்வுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பெரியாரின் வெண்கலச் சிலையின் முகம், கண்ணாடியை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்தவுடன் சம்பவ இடத்தில் திகவினர் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. 

தற்போது  மீஞ்சூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,  தமிழக அரசே, சனாதனப் போக்கிரிகளின் இழிச்செயலைக் கட்டுப்படுத்த வேண்டும், வேடிக்கை பார்க்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை பீடம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு ஏதோ மர்ம நபர்கள் காவி கொடியைக் கட்டியதோடு சிலை மீது சில உபயோகம் அற்ற பொருட்களை வீசி சென்று உள்ளனர். நேற்று காலை இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவே களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவற்றை அகற்றினர். இந்த நிலையில் அண்ணா சிலையில் காவிக் கொடி கட்டிய சம்பவத்தில் மனநோயாளி ஈடுபட்டுள்ளது சிசிடிகி காட்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

திரித்துவ புரத்தைச் சேர்ந்த மன நோயாளி ஒருவர் அண்ணா சிலை பீடத்தின் மேலே காவிக் கொடியுடன் ஏறுவது அங்குள்ள சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடைசியில் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டது மனநோயாளியே என்பது இந்த காட்சி மூலம் தெளிவாகியுள்ளது.

-பெ.மதலை ஆரோன்