கொரோனா பரவலின் காரணமாக, கடந்த பல மாதங்களாகத் தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கோடு சேர்த்து, போக்குவரத்து தொடர்பான முடக்கங்களும் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஜூலை 31 ம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிகளானது, தற்போது ஆகஸ்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில், மற்ற அனைத்தையும் விட மும்மரமாகக் கவனிக்கப்படுவது, போக்குவரத்து விதிமீறல்கள்தான்.  அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வந்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்ட நிலையிலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் ஜூலை 24 கணக்குப்படி, ரூ.18.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்திருந்தது .
 
அந்த கணக்கில், `கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் 122 நாளில் 8,07,214 வழக்குகள் பதிவு செய்து 8,87,566 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6,46,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக இன்று வரை ரூ.18,57,32,111அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது' என்று 
தமிழகக் காவல்துறை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீவிர முழு ஊரடங்கு யாவும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே இருப்பதாலும், பிற நாள்களில் தளர்வுகள் இருப்பதாலும்தான் இந்தளவுக்கு அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாகக் கருத்துச் சொல்லப்பட்டு வந்தது. `இந்தளவுக்கு அதிக அபராதம், பொதுமக்கள் அதிகம் வெளியில் வருவதையே காட்டுகிறது. இப்படி மக்கள் அதிகம் வருவது, கொரோனாவை அதிகப்படுத்துவதற்கான வழி. ஆகவே முடிந்தவரை அனைவரும் வீட்டிலிருக்கப் பயில வேண்டும்' என்று கருத்தும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 24 கணக்குப்படி, 18. 72 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், 6,49,078 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 8,95,628 பேர் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை இன்னும்கூட உயரலாம் என்று சொல்லப்பட்டது.

ஆறு நாள்கள் கடந்த நிலையில், ஜூலை 30 ம் தேதியான இன்று, இதுவரை வெளியான தொகை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. அதில், ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுநாள் வரையிலான வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை, மொத்தம் ரூ.19.17 கோடி என்றாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 6,57,684 பொது முடக்க விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9,19,186 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 8,35,435 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி உள்ளது. பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இங்கு நோயாளிகள் எண்ணிக்கை 50,000 என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளது. தேசிய அளவில் தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது. மக்களை நோய்த்தொற்றிலிருந்து காக்க 6ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்து வந்தது. ஜூலை 31 -ம் தேதிக்குப் பிறகு, அடுத்த கட்டமாகத் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாகத் தான் நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. ஆனால் மக்கள் இந்தளவுக்கு வெளியே வந்து, ஊரடங்கை மதிக்காமல் இருப்பது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

-பெ.மதலை ஆரோன்