கொரோனா தொற்றினால், மக்கள் பணியில் இருக்கும் கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்படும் நிகழ்வுகள் இந்தியாவில் தினமொன்று நடந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சித்தரும் விதமாக, இன்றைய தேதிக்கு அனைவருமே அதிலிருந்து முழுமையாக மீண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே ஒருசில இறப்புகளும் பதிவுசெய்யப்பட்டு வருகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

இந்தியாவிலேயே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன். தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியில் அவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார் அன்பழகன். `ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தில் செயல்பட்டபோதுதான் அன்பழகனுக்கு கொரோனா ஏற்பட்டிருக்க வேண்டும் எனக்கூறப்பட்டதைத் தொடர்ந்து, அந்த திட்டமும் அதுசார்ந்த செயல்பாடுகளும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக, `ஒன்றிணைவோம் வா' பணியிலிருக்கும் நபர்கள், முறையாக மாஸ்க் அணிவதில்லை - சமூக விலகலோடு இருக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

அன்பழகனின் இறப்பைப் போல மற்றுமொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட, திமுக தனது ஒன்றிணைவோம் வா திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.  திமுகவின் தலைவர் ஸ்டாலின் சார்பில், `இது பேரிடர் காலம். மக்களோடு நாம் இருக்கவேண்டும்' எனக்கூறி, `இனி ரொம்ப ஸ்ட்ரிக்டாக அனைத்து வழிமுறைகளையும் அனைவரும் பின்பற்ற வேண்டும்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதோடு, அந்த விஷயம் முடிந்துவிட்டது. பின்னாள்களில் கட்சிக்காரர்கள் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும்கூட, அனைவருமே நலமுடன் வீடு திரும்பியதால் ஆறுதலடைந்தது திமுக. 

ஆனால் அந்த ஆறுதல் நீடித்திருக்கவில்லை. காரணம், குணமாவோர் அதிகம் இருந்தபோதிலும், தொற்று ஏற்படாத வகையில் திமுக நிர்வாகிகள் பாதுகாப்பாக நடந்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு மட்டும் அப்படியே இருந்தது. ஒன்றிணைவோம் வா தொடர்பாக வைக்கப்பட்டு வந்த விமர்சனங்கள் யாவும், தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் திமுகவினர் மீதும் வைக்கப்பட்டது. 

இதற்கிடையில், ஐந்து தினங்களுக்கு முன்னர், அதாவது ஜூலை 26 ம் தேதி, மறைந்த எம்.எல்.ஏ. மற்றும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகனின் இடத்துக்கு, நே.சிற்றரசு என்பவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், இதற்கு முன்பு இதே சென்னை மேற்கு பகுதியில், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருந்தவர். இவருடைய இடத்துக்கு, ஜெ.அன்பழகனின் மகனான ராஜா அன்பழகனை பணி அமர்த்தினார் உதயநிதி ஸ்டாலின்.

ராஜா அன்பழகனுக்கு தரப்பட்ட பதவி, பலராலும் வரவேற்கப்பட்டது. இன்னொருபக்கம், சிற்றரசுவின் இட மாற்றமும், அவருடைய ஆதரவாளர்களுக்கு அதீத சந்தோஷத்தை கொடுத்தது.

ராஜா அன்பழகன் - சிற்றரசு விஷயத்தில், மீடியாக்கள் அதிகம் பேசியது, ராஜா அன்பழகன் பற்றிதான். காரணம், அன்பழகனின் மறைவுக்கு பிறகு அவர் குடும்பத்தில் ஒருவரை கட்சியில் பணியமர்த்தி இருப்பது, பாராட்டத்தக்க விஷயமாக பார்க்கப்பட்டது. மீடியாக்களால் அதிகம் பேசப்படாத நிலையில், சிற்றரசுவுக்கு அவரின் ஆதரவாளர்கள் தங்களின் மகிழ்ச்சியை அளவுக்கதிகமாக தெரிவிக்க தொடங்கிவிட்டனர். இங்குதான் சிக்கல் தொடங்கியது.

சிற்றரசு தற்போது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு சென்ற சென்றிருக்கிறார். பணி மாற்றத்துக்கு பிறகு சொந்த ஊருக்கு போன இவருக்கு, அங்கு மிக பிரமாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர் அவர் ஆதரவாளர்கள். பொது நிகழ்ச்சி போன்றதொரு அளவுக்கு ஆட்கள் - ஆனால் பொது நிகழ்வல்ல என்று சொல்லும் வகையில் ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்படப்பட்டுள்ளது. 

எஸ்.யூ.வி வகை கார் ஒன்றில் சிற்றரசு செல்ல, முன்னே இரு சக்கர வாகனங்களில் தொண்டர்கள் அணி வகுக்க, காருக்கு பின்னால் பல கார்களில் பிற தொண்டர்கள் அணி வகுக்க, கொண்டாட்ட நேரங்களில் அதில் விருந்தாளியாகக் கலந்து கொள்ள வரும் அதிகாரியை வரவேற்பது போல இந்த நிகழ்வுகள் யாவும் அமைந்திருந்தது. கூடவே ஊருக்குள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களும் நடைபெற்றுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்ற தொண்டர்களில் முக்கால்வாசி பேர், முகக் கவசம் கூட அணியவில்லை. கூட்டம் காரணமாக சமூக இடைவெளியும் கிடையாது. இவை அனைத்துமே, காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.

கொரோன பரவல் நேரத்தில், எதிர்க்கட்சியினர் - அதுவும் மக்கள் பணிகளில் இருப்பவர்கள் இந்தளவுக்கு மோசமாகவும் அப்பட்டமாகவும் விதிமுறைகளை மீறுவது எந்த வகையில் சரி என்றும், இவையாவும் பிறருக்கு தவறான உதாரணமாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்றும், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சி தொண்டர்கள், பிற கட்சி தொண்டர்கள் என பலரும் இதுபற்றி சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் ஆதரவாளர்களிலேவும், சிற்றரசுக்கு தரப்பட்ட இந்த வரவேற்பை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தரப்பில், `நினைவு தெரிந்தது முதல் திமுகவுக்காகவே உழைத்த ஒருவர், பேரிடர் காலத்தில் நோய்ப்பாதிப்பால் இறந்திருக்கிறார். அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு சிற்றரசு பதவிக்கு வந்துள்ளார். இதில் கொண்டாட்டம் எதற்கு? கருணாநிதி மறைவுக்கு பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, அதை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றுதான் கூறியிருந்தார். அப்படியிருக்கும் போது, கழகத்தின் உறுப்பினர்கள் இப்படி நடந்துகொள்வது, அக்கட்சி மீதான நம்பிக்கையையே அசைக்கிறது" என்று கூறியுள்ளார் ஒருவர்.

-பெ.மதலை ஆரோன்.