கன்னியாகுமரி, குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளைக் கொட்டியும், காவிக் கொடியையும் கட்டியுள்ளனர். மேலும் பழைய சீரியல் பல்பு மற்றும் சிவப்பு பூக்கள் கொண்ட ஆரம் வீசப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஷயம் பரபரப்பானதைத் தொடர்ந்து, அண்ணா சிலை மீது கிடந்த சீரியல் பல்புகளையும், சிவப்பு பூக்களையும், காவிக்கொடியையும் போலீசார் அகற்றினர். கூடவே அண்ணா சிலை முன்பு காவிக் கொடியைக் கட்டியது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையையும் தொடங்கினர். 

அண்ணா சிலைக்கு நேர்ந்த இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். தனது கண்டனத்தில், `தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ளத் தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை, அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.

ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள பெரியார் சிலை மீது, இந்து அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் காவி சாயம் பூசியதற்காகக் கைது செய்யப்பட்டார். மேலும் அதைப்போல புதுச்சேரியில் உள்ள வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து அவமதிப்பு செய்தனர். இதனை எதிர்த்து புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள் போரட்டம் நடத்தினர், மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர், பெரியார் சிலையை அவமதித்தது, காட்டுமிராண்டித்தனமான செயல். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் இச்செயலில் ஈடுபட்டவர்களை அம்மாநில அரசு நிச்சயம் கைது செய்ய வேண்டும்  என்றும் கடுமையாகச் சாடியிருந்தார். 

ஊரடங்கு நேரத்தில் தமிழகத்தில் தொடர்ந்து தலைவர்கள் சிலைக்கு இப்படியான சம்பவங்கள், நடந்தேறிவருவது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிகழ்வு குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின்,”கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம்! தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ளத் தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க!” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினை தொடர்ந்து, திமுக - வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விஷயத்தின் மீதான தனது ஆதங்கத்தை தற்போது தெரிவித்துள்ளார். உதயநிதி, தன்னுடைய ட்விட்டரில் இதுபற்றி, `குமரியில் பேரறிஞர் அண்ணா சிலையில் ’காவிக்கொடி கட்டி’ அவமதிக்கப்பட்டதைக் கடுமையாக கண்டிக்கிறேன். 'காவி பூசுவது காட்டுமிராண்டித்தனமா?தெய்வீகச்செயலா?’ என பட்டிமன்றம் நடத்தாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியையும் தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

மேலும் அம்மா மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், டிடிவி தினகரனும், இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். தனது பதிவில், ``தந்தை பெரியார், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச்  சிலைகளைத்  தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையும் காவிக்கொடியால் அவமதிக்கப்பட்டிருப்பது  கண்டனத்திற்குரியது. இத்தகைய நச்சு செயலில் ஈடுபடுபவர்கள் மீது  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தொடரும் சிலை அவமதிப்பு சம்பவங்கள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு இவ்வளவு துணிச்சல் இந்த விஷமிகளுக்கு எங்கிருந்து வரும்? சமூக அமைதியைச்  சீர்குலைக்கும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார் தினகரன்.

-பெ.மதலை ஆரோன்