சென்னையின் புறநகர்ப் பகுதியான பல்லாவரம்  நகராட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கான அஞ்சல் குறியீட்டு எண் (பின் கோடு) மாற்றம் செய்துள்ளதாகச் சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர்  வி.பி.சந்திரசேகர் இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜூலை 9-ம் தேதி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்லாவரத்தில் கிருஷ்ணா நகர் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, ராஜராஜேஸ்வரி அவின்யு, ரெயின்போ காலணி முதல் மற்றும் 2-வது தெரு, கங்கா தெரு, சாமிநாதன் தெரு ஆகிய பகுதிகளின் அஞ்சல் பட்டுவாடா, பழைய பல்லாவரம் – 600117 அஞ்சலகத்தால் இதுவரை செய்யப்பட்டு வந்தது.  இந்தப் பகுதிகளுக்கான அஞ்சல் பட்டுவாடாவை இம்மாதம் 13-ந் தேதியிலிருந்து மடிப்பாக்கம் (600091) அஞ்சலகம் செய்ய உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட பகுதிவாழ் பொதுமக்கள் இனி 600091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம்தான், தமிழக அரசு ஊர்ப் பெயர்களை மாற்றி, அதுதொடர்பான சர்ச்சையைக் கிளப்பியிருந்தது தமிழக அரசு. தமிழ் உச்சரிப்பு என்ற அடிப்படையில், தமிழ் மொழிக்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஊர்ப் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டதாக அந்த அரசாணை தெரிவித்தது.

ஆனால் அந்த அரசாணை பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. குறிப்பாக, `நாளை முதல் ஊர்ப் பெயரில் மாற்றம் செய்யப்படுகிறது' என அரசு அறிவித்திருந்தது ஜனநாயக நடைமுறையே அல்ல எனக்கூறி விமர்சனங்கள் எழுந்தன. `மொழிப் பெருமிதம் அவசியம் என்ற போதும் தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற காரணிகளையும் கருத்தில் கொண்டு, இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று வாதிட்டார் வழக்கறிஞராவர்.

சர்ச்சைகளைத் தொடர்ந்து, பெயர்கள் திருத்தி வெளியிடப்பட்ட அரசாணை, திரும்பப் பெறப்படுவதாக அடுத்தடுத்த தினங்களிலேயே தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டிய ராஜன் தெரிவித்துவிட்டார். இப்படியான மாற்றங்களோ சர்ச்சைகளோ பின்கோடு மாற்றத்துக்கும் எழலாம் என நினைத்து அச்சம் தற்போது பொதுவெளியில் எழுந்துள்ளது. 

இதற்குப் பதில் சொல்லும்விதமாக `தற்போது, இந்த அஞ்சல் பட்டுவாடாவை, மடிப்பாக்கம் அஞ்சலகம் செய்வதற்குக் காரணம், விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண தபால், மணியார்டர் ஆகியவற்றை விரைவாகப் பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வகையில் பல்லாவரம் பகுதிகளின் அதிகார வரம்பும், அஞ்சல் குறியீட்டு எண்ணும் மாற்றப்பட்டுள்ளது' எனக் கூறியிருக்கிறார் வி.பி.சந்திரசேகர்.

- பெ.மதலை ஆரோன்