சென்னையில் நள்ளிரவு நேரத்தில் காதலியைப் பார்க்க வந்த காதலன், ஒருவர் சுவர் ஏறி குதித்து போது, சுமார் 75 அடி ஆழமான பாழும் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூர்  வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஜிலான் என்கிற இளைஞர், டிப்ளமோ படித்து முடித்து விட்டு, அதே பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். 

இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால், கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அந்த நேரத்தில், தன் செல்போன் கடைக்கு வரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார் ஜிலான். அந்த நேரத்தில், திடீரென காதலியின் வீட்டருகே ஜிலான், வந்துகொண்டிருந்த போது, அந்த இளைஞருக்கு தன்னுடைய காதலியின் ஞாபகம் திடீரென்று வந்து உள்ளது. இதனால், அந்த காதலன் காதலியின் வீட்டின் சுவர் ஏறி குதித்து, உள்ளே செல்ல முயற்சி செய்த போது, எதிர் பாராத விதமாக, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரைப் பார்த்துள்ளனர். அத்துடன், அவரை பார்த்து “திருடன் திருடன்” என்று சத்தம் போட்டுள்ளனர்.

இதனால் பயந்து போன ஜிலான், என்ன செய்வது என்று தெரியாமல், திகைத்துப் போய் நின்று உள்ளார். உடனே, சுதாரித்த அந்த காதலன், அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார். அந்த நேரம் பார்த்து, அந்த பகுதியில் கிணறு ஒன்று இருந்துள்ளது. அப்போது, நள்ளிரவு இரவு நேரம் என்பதால், இருட்டில் கிணறு இருப்பது தெரியாமல், சுமார் 75 அடி ஆழ முள்ள பராமரிக்கப்படாத கிணற்றில் தவறி விழுந்து, வசமாக மாட்டிக்கொண்டார். 

மேலும், கிணற்றில் தண்ணீர் ஏதும் இல்லாமல் வறண்டு போய் இருந்ததால், உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. அத்துடன், கிணற்றில் விழுந்த நிலையில், கிணற்றில் இருந்து தப்பிச் செல்வதற்காக, அங்கிருந்தே சத்தம் போட்டு உதவி கேட்டு உள்ளார். அப்போது, அந்த இளைஞனின் கூச்சல் சத்தம் கேட்ட அவரின் காதலி மற்றும் அவருடைய பெற்றோர் வந்து பார்த்துள்ளனர். அப்போது, கிணற்றில் விழுந்து கிடப்பது ஜிலான் என்பது தெரிய வந்தது. 

அத்துடன், பராமரிப்பு இல்லாத பாழுங்கிணற்றில் அந்த இளைஞன் கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து, அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு இந்த தகவல் தெரிந்த நிலையில், அந்த பகுதி பொது மக்கள், இது தொடர்பாக உடனடியாக அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ள தீயணை துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஜில்லானை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

அப்போது, உடலில் பல இடங்களில் அதிகமான காயங்கள் இருந்ததால், அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 

அப்போது, காதலியைப் பார்க்க சுவர் ஏறி குதித்த உண்மை போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட இளம் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். 

இதனிடையே, சென்னையில் நள்ளிரவு நேரத்தில் காதலியைப் பார்ப்பதற்காக வந்த இளைஞர், கிணற்றில் தவறி விழுந்து போலீசாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.