இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னையை தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு அருகே இரு ராணுவப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவியது. மேலும், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன.  இதையடுத்து, இருநாட்டு ராணுவ கமாண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில், சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன. மேலும், ஹாட்ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படைகள் விலக்கிக் கொண்டன.

இந்நிலையில், தற்போது இந்திய ராணுவத்தினரின் தகவல்கள் மற்றும் தனி மனித தகவல் பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் முகநூல், இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃபேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் இட், செண்டெர், யூசி பிரவுசர், யுசி பிரவுசர் மினி, சூம், கேம் ஸ்கேனர், பியூட்டி ப்ளஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி, டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக் கொண்ட 59 செல்போன் செயலிகளுக்குத் தடைசெய்து உத்தரவிட்டது. முதலில் அவையாவும் சீன - இந்திய எல்லைகளுக்கு ஏற்பட்ட மோதலால் ஏற்பட்டதெனக் கூறப்பட்டது. எல்லை மோதலுக்கும், தனியார் நிறுவனங்களைத் தடை செய்ததற்கும் உள்ள பின்னணி என்ன எனச் சொல்லி பலதரப்பினரும் விமர்சனம் வைத்தனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில், `இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த 89 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது,  இந்திய ராணுவம் 89 ஆப்களை பயன்படுத்தத் தடைவிதித்துள்ளது. இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் சீனாவிலிருந்து வரும் ஆப்ஸ் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை, மற்ற நாடுகளின் ஆப்களையும் பட்டியலிட்டுள்ளது இந்திய ராணுவம்.

மேலும், இந்த செயலிகளை ராணுவ வீரர்களின் செல்போன்களில் இருந்து நீக்குவதற்கு ஜூலை 15 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்துள்ளது அரசு. செயலிகளை நீக்காதவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை இராணுவ வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதேபோன்ற தடை இந்திர இராணுவத்திற்கு முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துபவர்களுக்குத் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. 

ஆனால், இதற்கு முன் ஒருமுறை சிக்கலான சூழ்நிலை ஏற்பட்ட போதும், இந்திய இராணுவம் தனது வீரர்களை பேஸ்புக்கைப் பயன்படுத்த அனுமதித்தது. ஆனால், சீருடையில் இருப்பது போன்ற படங்களை முகநூலில் பதிவிடக் கூடாது எனவும், அவர்களின் யூனிட்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் முகநூல் பயன்படுத்த அனுமதி கொடுத்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய இராணுவத்தால் தடைசெய்யப்பட்ட 89 செயலிகளின் முழு பட்டியல்!

- பெ.மதலை ஆரோன்