கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவிக்கு, சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், அவற்றைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகின்றன. இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், பல்வேறு தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்ப உள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பாக கடந்த சில மாதங்களாக அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதன் காரணமாக, கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் தன்னார்வலராக பணியாற்ற விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், கொரோனா தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி உடன் சேர்ந்து தன்னார்வலர்கள் பலரும், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்தே பணி புரிந்து வருகின்றனர்.

அதன் படி, சென்னையில் கொரோனா தொற்றைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வீடு வீடாகப் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் தன்னார்வலராகப் பணி புரிந்து வரும் தனியார் கல்லூரி மாணவியிடம், சென்னை தம்புச் செட்டித் தெருவில் உள்ள மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணி ஆற்றும் கமல கண்ணன், அந்த மாணவிக்கு காதல் வலை விரித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே திருமணம் ஆன மாநகராட்சி உதவி பொறியாளர் கமல கண்ணன், தனது செல்போனில் அந்த இளம் பெண்ணுக்கு போன் செய்து, அவரது ஆசையை தூண்டி விடுகிறார். ஆசை ஆசையாய் பேசி, பணம் மற்றும் பதவி மீதான ஆசையை கமக கண்ணன், அந்த மாணவிக்கு காட்ட முயற்ச்சிகிறார். அத்துடன், செல்போனில் ஆபாசமாகவும் அவர் பேசுகிறார். 

உதவி பொறியாளர் கமல கண்ணனின் காதல் தொல்லை தாங்கக் கொள்ள முடியாமலும், அதை சகித்துக் கொள்ள முடியாமலும், தவித்த வந்த அந்த இளம் பெண், ஒரு கட்டத்தில் கமல கண்ணன் பேசுவதை, தன் போனில் ஆடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டார். அதன் படி, அந்த ஆடியோவில் பேசும் மாநகராட்சி உதவி பொறியாளர் கமல கண்ணன், “நீ அழகாக இருக்கிறாய். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்த்திருந்தால், நீ தான் எனக்கு இன்நேரம் மிஸஸ் ஆகி இருப்பாய்” என்று, உதவி பொறியாளர் கமல கண்ணன் உருவி உருவி காதல் வலை விரிக்கிறார்.

அப்போது, எதிர் முனையில் பேசிய அந்த இளம் பெண், மகல கண்ணனின் ஆசை வார்த்தையில் துளியும் விருப்பம் இல்லாமல், நழுவி நழுவி செல்ல பார்க்கிறார். ஆனால், வம்படியால் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை கமல கண்ணன் காதல் தொல்லை செய்கிறார்.

குறிப்பாக, மாணவிக்கு அடிக்கடி போன் செய்யும் கமல கண்ணன், பேசும் காதல் வார்த்தைகள் மற்றும் ஆசை வார்த்தைகளை அந்த இளம் பெண்ணின் வாயிலிருந்தே கேட்கும் விதத்தில், “நான் இப்ப என்ன சொன்னேன்? அதை சொல்லு” என்று கமல கண்ணன் மீண்டும் மீண்டும், அந்த பெண்ணை சொல்லச் சொல்லி போனில் டார்ச்சர் செய்கிறார். ஆனால், அந்த பெண்ணோ, பட்டும் படாமலும் விலகி செல்லும் விதமாக, “சும்மா கலாய்க்காதீர்கள் சார்” என்று கூறி சிரிக்கிறார்.

அதற்கு, உதவி பொறியாளர் கமல கண்ணன், “நான் விளையாடல, உண்மைய தான் சொல்றேன். 2 வருடத்திற்கு முன்பே உன்னை பார்த்திருந்தால், நீ தான் என் மிஸஸ்” என்று, மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லி, காதல் உருகி உருகி, அந்த பெண்ணின் மனதை உருக வைக்க முயலும் விதத்தில் பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் கமல கண்ணனின் காதல் தொல்லையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அந்த ஆடியோவை தன் சக நண்பர்களுக்கு அனுப்பி என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார். ஆனால், ஆடியோவை யாரோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால், அரசு அதிகாரி ஒருவர் கல்லூரி மாணவிக்குக் காதல் வலை விரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அத்துடன், தன்னார்வலப் பணியில் ஈடுபட்டுள்ள மாணவிக்கு மாநகராட்சி உதவிப் பொறியாளர் காதல் தொல்லை அளித்த விவகாரம், சென்னை மாநகராட்சி மட்டுமின்றி தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம், சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், இளம் பெண் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட அனைத்து மகளிர் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவிக்கு, சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை பணி இடை நீக்கம் செய்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.