“கருவை கலைத்துவிட பணம் கொடுப்பதாக கூறினர்” என்று, திருச்சி காதல் மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பகிரங்கமாக குற்றம் சாட்டிய உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பகவான் பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி - லெட்சுமி தம்பதிக்கு மொத்தம் 4 பெண் பிள்ளைகள் இருந்துள்ளனர். இதில், 4 வது பெண் குழந்தைக்கு தற்போது 17 வயது நடந்துகொண்டு இருந்தது. அவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் பகவான் பட்டியை சேர்ந்த 22 வயதான ராம்கி, பழனிச்சாமி - லெட்சுமி தம்பதியினர்; தந்தை மாமா உறவு முறை என்பதால், அடிக்கடி பழனிச்சாமி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, பழனிசாமியின் 4 வது மகளான 17 வயது சிறுமியை ராம்கி காதலித்துள்ளார். 

இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. சிறுமியும் தன் மாமா உறவு முறைகொண்ட பையன் என்பதால், அவரை நம்பி காதலித்து வந்துள்ளார்.

இருவரும் விரும்பி காதலித்து வந்த நிலையில், காதலின் அதீத அன்பால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், அந்த சிறுமி கரு உற்ற நிலையில், அந்த பெண்ணின் வயிற்றில் 5 மாத கரு வளர்ந்து உள்ளது. வயிற்றில் 5 மாத கரு வளர்வதால், தன்னை உடடினயாக திருமணம் செய்து கொள்ளும் படி, அந்த இளம் பெண் ராம்கியை வலியுறுத்தி உள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த ராம்கி, அந்த பெண்ணை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அந்த பெண் ராம்கியிடம் கெஞ்சி உள்ளார். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத, அவர் தன் செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டு, தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது.
 
பின்னர், இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், ராம்கியின் பெற்றோரை சந்தித்து, “இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்” என்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த ராம்கியின் பெற்றோர், சிறுமியின் பெற்றோரை தரக்குறைவாகப் பேசியும், திட்டியும் அனுப்பி வைத்துள்ளனர்.  

இதனால், தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த அந்த பெண், “தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டுத் தலைமறைவான ராம்கியை கைது செய்யக் கோரி” அந்த சிறுமி, கடந்த மாதம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால், கடந்த வாரம் வரை அந்த இளைஞர் கைது செய்யப்படாமல் இருந்ததால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது பெற்றோருடன் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்து, காவல் நிலையம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது, மெத்தனமாகச் செயல்படும் போலீசாரை கண்டித்தும், தன்னை ஏமாற்றிய காதலனைக் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட இளம் பெண் கோரிக்கை விடுத்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் , தலைமறைவாக 
இருக்கும் இளைஞரை இன்னும் 2 நாட்களில் கைது செய்வதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, போலீசாரின் கோரிக்கையை ஏற்று, அந்த பெண் தர்ணா போராட்டத்தை கை விட்டு, வீடு திரும்பினார். 

இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் தலைமறைவாக இருந்த ராம்கி, முன் ஜாமீன் பெற்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

ராம்கி, முன் ஜாமீன் பெற்றே காவல் நிலையத்தில் சரண் அடைந்ததைத் தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி, என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டிலிருந்த மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் உதவியுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்க, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள்; சிறுமியும், அவரது வயிற்றிலிருந்த சிசுவும் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை மத்திய மண்டல ஐ.ஜி. எச்.எம்.ஜெயராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல் ஹக், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். 

அத்துடன், இந்த வழக்கில் சரண் அடைந்த காதலன் ராம்கியை, போலீசார் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை ஜூலை வரும் 22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிபதி செந்தில் குமார் உத்தரவிட்டார். இதனால், ராம்கியை போலீசார் 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியது, பெண்கள் மீதான கொடுமைகள் செய்தது என ராம்கி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், “காதலித்து ஒன்றாக வாழ்ந்துவிட்டு, கருவைக் கலைத்துவிடப் பணம் கொடுப்பதாகக் கூறினர். பணத்தை வாங்க நாங்கள் மறுத்து விட்டோம். இதனால் எங்களிடம் தகராற்றுக்கு வந்தனர். எங்களுக்குப் படிப்பு அறிவு இல்லாத காரணத்தால், எங்களை ஏமாற்றி அவர்கள் சட்டத்திலிருந்து தப்ப பார்க்கிறார்கள்” என்றும், பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, சமீபத்தில் திருச்சி மாவட்டம் அத்வத்தூர் பாளையம் அருகே 14 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதும், திருச்சியை அடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதும் கடந்த வாரமும், கடந்த மாதமும் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தற்போது அதே திருச்சி மாவட்டத்தில் மேலும் ஒரு சிறுமி காதலனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.