சென்னையில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இதனிடையே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, அனைவரும் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவித்த போது, வீட்டு ரேஷன் அட்டைத் தாரர்களுக்குத் தமிழக அரசு சார்பில் தலா ஆயிரம் ரூபாய் வழங்கியதுடன், வீட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விலை இல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கியது. 

மேலும், இது தொடர்பாகத் தமிழக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் பழனிசாமி, “வாடகை வீட்டில் உள்ளவர்கள் யாரும் வாடகை பணம் தர வேண்டாம் என்றும், யாரும் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது” என்றும், அறிவித்தார். அத்துடன், “தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை, வீட்டை காலி செய்யும் படி, வீட்டின் உரிமையாளர் கூறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்து இருந்தார். மேலும், வங்கியில் மாத தவணை செலுத்துவோருக்கு மத்திய அரசு முதலில் 3 மாதங்கள் சலுகைகள் அறிவித்தது. 

இதனையடுத்து, முதலமைச்சர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்றும், தமிழகத்தின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், வீட்டு உரிமையாளர்கள் பலரும், தங்கள் வீட்டு வாடகை தொகையை வாங்காமல் இருந்தனர். சிலர், பாதி தொகை மட்டும் பெற்றுக்கொண்டனர். ஆனால், சென்னையில் பல வீட்டு உரிமையாளர்களும், தங்கள் வீட்டு வாடகை பாக்கியை உரிமை என நினைத்து கராராகக் கட்டாயப்படுத்தி வசூல் செய்து வந்தனர். இதன் காரணமாக, பலரும் சென்னை போன்ற நகரங்களில் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி வந்தனர்.

இந்நிலையில், சென்னை குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவர், தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில், அஜித் என்ற இளைஞர் வாடகைக்குக் குடியிருந்ததாகக் கூறப்படுகிறது. 

கொரோனா காரணமாக, அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில், அஜித் என்ற இளைஞர் வேலை இன்றி சாப்பாட்டிற்கே கடும் சிரமப்பட்டு வந்தார். இந்த விசயம் தெரிந்தும், வீட்டு உரிமையாளர் குணசேகர், அஜித் என்ற இளைஞரிடம் வாடகை கேட்டதாகத் தெரிகிறது.  

மேலும், தொடர்ந்து 4 மாதங்களாக வாடகை கேட்டு, வீட்டு உரிமையாளர் கடும் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்த இளைஞர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துள்ளார். அந்த நேரத்தில், வீட்டின் உரிமையாளர் மீண்டும் வாடகை கேட்டு தொந்தரவு செய்து உள்ளா். இதன் காரணமாக, இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த அஜித், தன் வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அவரை குத்த முயன்றுள்ளார். அப்போது, வீட்டு உரிமையாளர் அவரை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனால், இன்னும் ஆத்திரம் அடைந்த அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரனை ரோட்டில் ஓட ஓட விரட்டிச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதனை அந்த பகுதியில் இருந்தவர்கள், பலரும் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது, வீட்டு உரிமையாளர் குணசேகரின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார், இளைஞர் அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், கொரோனா காலத்தில் இனி வாடகை வசூலிப்பது தொடர்பாக, இனியாவது தமிழக அரசு உறுதியா நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்பது, பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.