ஒவ்வொரு நிமிடத்திற்கும் கணினிகளைத் தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது.அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்வேர்டுகள் திருடப்படுகிறது. இந்த செயல்களின் மூலம் 200 மில்லியன் டாலர் வரை திருடப்படுகிறது. 

கடந்த சில வருடங்களாகப் பார்த்தால் இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 சதவீதம் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாளுக்கு நாள் பெருகி வரும் சைபர் குற்றங்கள் அதிக பொருள் சேதத்தையும், புகழ் சேதத்தையும் உலகளாவிய நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி, தீராத தலைவலியாகவே மாறியிருக்கிறது.தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள ஊரடங்கின் காரணமாக, வீட்டிலிருந்தே வேலை என்ற செயல்பாடு அனைத்து இடங்களிலும் அதிகரித்துள்ளது. மேலும், எந்த வித பாதுகாப்பும் இன்றி இணையத்தில் வேலை செய்து வருவதால் பலரின் தகவல்கள் திருடப்பட்டு வருகின்றன. இது குறித்து பலருக்கும் தெரிவதேயில்லை.  இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் மட்டும், தகவல் திருட்டு, சைபர் தொடர்பான குற்றங்கள் என 200 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் அலுவலகத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், வீட்டிலிருந்தே பணி செய்வோர் தேவையான அளவு சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், ஒவ்வொருவருக்கும் புதிய சைபர் செக்யூரிட்டு முறை அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். 

கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 13.12 கோடி சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக Cyber Threat Monitor அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இதன் மூலமாக 1.24 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அடையாள திருட்டால் 40 சதவிகிதம் நுகர்வோர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

2019-ல் இந்தியாவில் ஏற்பட்ட சைபர் குற்றங்களின் எண்ணிக்கை : 13.12 கோடி 

சைபர் குற்றங்களினால் ஏற்பட்ட இழப்பு : ரூ. 1.24  லட்சம் கோடி

இந்தியாவில்  அடையாள திருட்டால் பாதிப்படைந்த நுகர்வோர்கள் : 40%

இந்தியாவில் சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான். இங்கு 44 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், அடையாளத்திருட்டினால் 81 சதவிகிதம் ஆண்களும், 76 சதவிகித பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். 

சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்!

ஆண் : 44%
பெண் : 33%

அடையாள திருட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்!

ஆண் : 81%
பெண் : 76%
 
சைபர் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் : 63%

தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் அதிக குற்றங்களை யார் செய்வது?

எல்லோராலும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு சலுகையின் காரணமாக எளிதில் இணைய வசதியும் கிடைத்து விடுகிறது. இதன் காரணமாக சைபர் குற்றங்களில் ஈடுபடுவது அனைவருக்கும் எளிதாகிவிடுகிறது. இந்தியாவில் 18 முதல் 39 வயதுடைய 41 சதவிகிதம் பேர் அதிகளவில் சைபர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல், இந்த வயதினரில் 81 சதவிகிதம் பேர் அடையாள திருட்டில் ஈடுபடுவதாக Cyber Threat Monitor அறிக்கை தெரிவிக்கிறது.

குற்றம் செய்பவர்கள்!

சைபர் குற்றங்கள்!

18-39 வயதினர் : 41%
40+ : 22%

அடையாள திருட்டு!

18-39 வயதினர் : 81%
40+ : 73%

இந்தியாவில் சைபர் அச்சுறுத்தலால் அதிகம் பாதிக்கப்படும் நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, கொல்கத்தா இரண்டாவது இடத்திலும், ஹைதராபாத் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

சைபர்  பாதிப்பு     நகரங்கள்
சென்னை 48%
கொல்கத்தா 41%
ஹைதரபாத் 39%
பெங்களூர் 39%
அகமாபாத் 38%
புனே 35%
மும்பை  30%
டெல்லி 28%

தொழில்நுட்பங்களையும், இணையதளத்தையும் பயன்படுத்துவதில் அதிக முனைப்புக் காட்டுவது குழந்தைகள் மட்டும் இளைஞர்களே. இதனால், தொழில்நுட்ப பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

தொழில்நுட்பங்களின் பாதிப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

1. உங்கள் குழந்தைகளிடம் மொபைல் அல்லது கணினி போன்றவற்றைக் கொடுக்கும் போதே, அதன் சாதக பாதகங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுங்கள். 

2. வைரஸ், மால்வேர், ஹேக்கிங், சைபர் தாக்குதல்கள் போன்ற விஷயங்கள், இது பற்றிய அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எல்லாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிடுங்கள். 

3. இணையம் அல்லது சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தல் தரும் விஷயங்கள், அறிமுகம் இல்லாத நபர்களின் தலையீடுகள் போன்ற அசாதாரணமான, சந்தேகத்திற்கு இடமான விஷயங்கள் எது நடந்தாலும், உங்களிடம் கட்டாயம் கூறவேண்டும் என அறிவுறுத்துங்கள்.

4. வங்கிகள், மொபைல் வாலட்டுகள் போன்ற நிதி தொடர்பான ஆப்ஸ்கள், தளங்கள் போன்றவற்றை உங்கள் கண்காணிப்பு இன்றி, குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். அதுமட்டுமின்றி இவற்றின் பாதுகாப்பையும் நன்கு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

5. சமூக வலைத்தளங்கள், செல்போன்கள் போன்றவற்றிற்கு பேரன்டல் கண்ட்ரோல் மென்பொருட்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் அவற்றையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. இணையம் மற்றும் அதுசார்ந்த விஷயங்கள் மூலம் கவனச்சிதறல்கள், மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால், உடனே மருத்துவ உதவியை நாடுங்கள். மனரீதியாக அவர்களுக்கு உற்சாகமூட்டுங்கள்!

7. உங்கள் குழந்தைகளுக்கு இணையம் மூலமாக ஏதேனும் பெரிய பிரச்னை, ஆபத்து என்றால், உடனே காவல்துறையினரின் உதவியை நாடிவிடுவது நல்லது. 

இது போன்ற சைபர் பாதுகாப்புக்குச் சீனாவை மட்டுமே குறை சொல்ல முடியாது. கணினி மூலம் பணிபுரிபவர்கள் தேவையற்ற, பாதுகாப்பு இல்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதே காரணம். நாம் நம்முடைய தகவல்களைச் சிறந்த முறையில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், சைபர் தாக்குதல் மற்றும் சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். 

நம் பாதுகாப்பு நம்முடைய கைகளில் மட்டுமே உள்ளது. 

- பெ.மதலை ஆரோன்