“கடவுள் ராமர் இந்தியர் அல்ல என்றும், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்து மீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாள பிரதமர் பேசியிருப்பது மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடவுள் ராமர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்தியாவில் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அந்த சர்ச்சையில் தற்போது, நேபாள பிரதமரும் சிக்கி இருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது, கடவுள் குறித்துச் சொல்லப்பட்ட கருத்து என்பதைத் தாண்டி, அரசியல் குறித்துப் பேசப்பட்ட சர்ச்சை கருத்து என்பது அரசியல் நோக்கர்களுக்கு நன்கு தெரியும்.

இந்திய எல்லையில், சீனா உரிமை கொண்டாடிய நிலையில், கடந்த மாதம் நேபாளமும் தன் பங்கிற்கு இந்தியாவிற்கு நெருக்கடியைக் கொடுக்க முயற்சி செய்தது.

அதன்படி, இந்தியாவிற்குச் சொந்தமான லிபுலேக் கணவாய், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், இந்தியாவை நேபாளம் சீண்டிப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியப் பகுதியை நேபாளத்திற்குச் சொந்தம் கொண்டாடும், அந்நாட்டுப் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் இந்த நடவடிக்கை இந்தியாவை எரிச்சல் ஊட்டியது.

குறிப்பாக, இந்தியாவில் உள்ள சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் சுமார் 1,850 கிலோ மீட்டர் எல்லையை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் உறுதியான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டு திகழ்கின்றன.

அத்துடன், நேபாளத்தின் சுமார் 32,000 கோர்கா வீரர்கள், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்பு தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், சீனாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் விதமாக நேபாளத்தின் இந்த நடவடிக்கையால், நேபாளத்திற்கும் - இந்தியாவுக்கும் இடையே தற்போது விரிசல் விழுந்துள்ளது.

இதன் காரணமாக, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்க எதிராக, அவரது சொந்த கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன், இந்தியா - நேபாளம் ஆகிய இரு நாட்டு உறவை மோசமாக்கும் விதமாகவும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அவர் கூறியதாகவும், இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடுமையாக எதிர்த்து நின்றனர். குறிப்பாக, நேபாள முன்னாள் பிரதமர் புஷ்மா கமால் தஹல் பிரச்சண்டாவும், தனது கண்டனத்தைத் தெரிவித்தார். இதனால், அவரின் பிரதமர் பதிவிக்கு ஆபத்து வந்தது. இதனால், அவர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஆதரவாகச் சீனா களம் இறங்கியது.

இந்நிலையில், நேற்று காத்மண்டுவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, “இந்தியத் தூதரகம் தனக்கு எதிராகச் செயல் படுவதாகவும், காத்மண்டுவில் பல்வேறு இடங்களில், தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும்” குறிப்பிட்டார். 

மேலும், “நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, “உண்மையான அயோத்தியா நேபாளத்தில் தான் உள்ளது. அது இந்தியாவில் இல்லை. ராமர் கடவுள் நேபாள நாட்டை சேர்ந்தவர். அவர் இந்தியர் அல்ல” என்று அவர் பேசி உள்ளதாக, நேபாள நாட்டில் இருந்து ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியானது. நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் இந்த கருத்து, இந்தியாவில் மீண்டும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, “சீனா, இத்தாலி வைரசை விட இந்திய வைரஸ் மிகவும் கொடியது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.