ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கோவை மாவட்டம் காந்தி புரத்தில் செயல்பட்டு வரும் ராஜா என்கிற ஹோட்டலில், பொது மக்கள் சிலர் உணவருந்த வந்தனர். அப்போது, அவர்கள் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த உதவி ஆய்வாளர் முத்து என்பவர், லத்தியால் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொது மக்களை சரமாரியாகத் தாக்கி உள்ளார்.
 
இதில் ஓசூரைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக, அந்த உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்ட நிலையில், நேற்றைய தினம் வைரலானது. இதனால், பொது மக்கள் பலரும் பொது மக்களை தாக்கிய உதவி ஆய்வாளர் முத்துவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். பலரும், எதிர் மறையான கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வந்தனர்.

இந்த சம்பவம், காவல் துறையின் உயர் அதிகாரிகள் கவனித்திற்கு சென்ற நிலையில், உதவி ஆய்வாளர் முத்துவை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி, கோவை மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அந்தக் கடையின் உரிமையாளர் மோகன்ராஜ் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, புகார் மனு அளித்தார்.

இந்த புகார் மனுவில், உதவி காவல் ஆய்வாளரின் முத்துவின் செயல் குறித்து புகார் மனுவில் விளக்கமாகக் குறிப்பிட்டு இருந்தார். 

அந்த மனுவில், “உதவி ஆய்வாளர் முத்து மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை பணியிடமாற்றம் செய்வது சரியான தீர்வு அல்ல என்றும், அவர் கருத்து தெரிவித்து இருந்தார். 

அத்துடன், பொது மக்கள் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்பட பல அரசியல் கட்சிப் பிரமுகர்களும், பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தினர். 

அதே நேரத்தில், மாநில மனித உரிமை ஆணையமும் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து கையில் எடுத்து உள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 வார காலத்தில் கோவை மாநகரக் காவல் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணைக்குழு தற்போது அமைக்கப்பட்டு உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, விசாரணை குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, நேரடியாக சம்பவங்கள் நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே, உதவி ஆய்வாளர் முத்துவை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து, கோவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தற்போது உத்தரவிட்டு உள்ளார். அதன்படியே, நேற்று கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட உதவி ஆய்வாளர் முத்து, தற்போது அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.