கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு.. பாதிரியா தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள்..!

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு.. பாதிரியா தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள்..! - Daily news

கேரள கோட்டயம் கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் கன்னியாஸ்திரிகள் மடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மடத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி இளம் கன்னியாஸ்திரியான 19 வயதான அபயா என்பவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசாரும், குற்ற புலனாய்வு துறையும் இது தற்கொலை தான் என இந்த வழக்கை முடித்து வைத்தனர்.  

அதன் பிறகு, இந்த வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி கொச்சி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், இந்த வழக்கில் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை என தொடர்ச்சியாக 3 முறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும், கடந்த 2007 ஆம் ஆண்டு மீண்டும் சி.பி.ஐ. புதிய குழு விசாரணையை தொடங்கியது.

இந்த விசாரணையின் தொடக்கத்தில், போலீஸ் உயர் அதிகாரிகள் கொலைக்கான ஆதாரங்களை அழித்தது, உடற்கூறு பரிசோதனை அறிக்கையை திருத்தியது உள்பட பல்வேறு மோசடிகள் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை படுவேகமாக சூடு பிடித்தது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் ஜோஸ் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 

அவர்களிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், “பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதை இளம் கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டார் என்றும், இதனால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என நினைத்த அவர்கள் இருவரும், இளம் கன்னியாஸ்திரி அபயாவை கோடாரியால் தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர்” என்பதும் தெரிய வந்தது.

அதன் பின்னர், இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகாலமக நடைபெற்று வந்தது. அப்போது, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பாதிரியார் ஜோஸ் மீதான குற்றச்சாட்டு சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. 

ஆனால், கடந்த ஆகஸ்டு 26 ஆம் துதி மீண்டும் இந்த வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்றது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 177 சாட்சிகளில் 49 பேர் சாட்சியம் அளித்தனர். இதில், ஒரு கன்னியாஸ்திரி உள்பட சிலர் முரண்பட்ட தகவல்களை அளித்ததால், வழக்கு விசாரணையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், அதிகாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

அதன் பிறகு, இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது, “கொலை சம்பவம் நடந்த அன்றைய தினம் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் கிணற்றை எட்டி பார்த்தபடி பதற்றமாக இருந்ததாகவும், மிக மோசமான சூழலில் அவர்கள் இருந்ததாகவும் ராஜு என்ற திருடன் அளித்த வாக்குமூலம் தான், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரையும் இந்த வழக்கில் முக்கியமாக சிக்க வைத்துள்ளது” என்று, விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியாக, கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் 2 பேரையும் கொலை குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ. நீதிமன்றம் உறுதி செய்தது. 

அத்துடன், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு நீதிபதி இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இவற்றுடன், 6.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இதனையடுத்து, இந்த வழக்கின் 2 வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அப்போது, தீர்ப்பை கேட்டதும் கன்னியாஸ்திரி செபி அங்கேயே கதறி அழுதார். பாதிரியார் தாமஸ் கோட்டூர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். இதனால், இந்த வழக்கின் தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment