“கொரோனா பொது முடக்கக் காலத்தில், பொது மக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று, டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கி உள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதுல் தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் பரவி வருகிறது. இதனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முதன் முறையாகத் தமிழ்நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, தமிழக காவல் துறையினர் பொது மக்களிடமும், சிறு குறு வியாபாரிகளிடமும் மிகவும் கடுமையாக நடந்துகொண்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி போலீசாரின் நன் மதிப்பு அவப்பெயரை ஏற்படுத்தியது. அத்துடன், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனால், போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இந்தாண்டு தற்போது மீண்டும் 14 நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று முதல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், “கொரோனா பொது முடக்கக் காலத்தில், பொது மக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று, டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொது மக்கள், பிற அலுவலர்களிடம் பின்பற்ற வேண்டியவை இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், பொது மக்களிடம் போலீசார், மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதைக் குறைவாகவோ நடந்துகொள்ளக்கூடாது” என்றும், அறிவுறுத்தி உள்ளார். 

“பிற அரசு துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை போலீசார் முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டு உள்ளார்.

“கூட்டத்தைக் கலைக்கத் தடியடி நடத்துவது, பலப்பிரயோகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், வணிகர்கள் மற்றும் வியாபாரிகளைக் கையாளும்போது மிகவும் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டு உள்ளார். 

“அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்துக்கொள்ளும்படி கண்ணியமான முறையில் போலீசார் அறிவுறுத்த வேண்டும் என்றும், குறிப்பாக சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமானத்துடன் போலீசார் நடந்துகொள்ள வேண்டும்” அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

“வியாபாரிகளைக் கடுமையான முறையில் நடத்தக்கூடாது என்றும், அத்தியாவசிய பொருள்களின் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை, காய்கறிகள் ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். 

அத்துடன், “மருந்துப் பொருள்கள், இதர மருத்துவ உபகரணங்கள் ஆகியவையும் தடையின்றி கொண்டு செல்லப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும். குறிப்பாக மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்சிஸன் கொண்டு செல்லும் வாகனங்களுக்குப் பின் பாதுகாப்பு வானங்கள் செல்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும், அவர் கூறியுள்ளார். 

“டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் தேவையான அளவு காவலர்களைக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“காவல் நிலையத்தில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஒருவேளை அடைத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முன் அனுமதி பெற வேண்டும்” என்றும், அறிவுறுத்தி உள்ளார். 

“காவல் நிலையத்தின் உள்ளே பொது மக்களை அனுமதித்தல் கூடாது என்றும், அவர்களுக்காக வெளியில் சாமியான அமைத்துக்கொள்ளலாம்” என்றும், கூறியுள்ளார். 

மேலும், “ஊரடங்கை மீறுபவர்களின் வாகனத்தைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஊரடங்கில் எந்த வாகனத்தையும் கைப்பற்றக் கூடாது” என்றும் போலீசாருக்கு அறிவுரை வழங்கி உள்ளார். 

“அப்படியே வாகனத்தைக் கைப்பற்றினாலும், சில மணி நேரத்தில் அவற்றை விடுவிக்க வேண்டும் என்றும், அதேபோல் கைப்பற்றப்படும் வாகனத்தைக் காவல் நிலையத்தில் வைத்திருத்தல் கூடாது“ என்றும், அவர் உத்தரவிட்டுள்ளார். 

“ஊரடங்கு காலகட்டத்தில் ஒவ்வொரு காவல் துறையினரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு, தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றுமாறும்” டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டு உள்ளார்.