திருமண ஆசை காட்டி, ரத்த காயம் ஏற்படும் அளவுக்குப்  பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சாணார் பாளையத்தைச் சேர்ந்த  சூர்யா என்ற இளைஞர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைக் காதலிப்பதாகக் கூறி, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Erode schoolgirl sexual assault

ஒரு கட்டத்தில் மாணவியை மயக்கி, தன் காதல் ஆசையில் விழ வைத்த சூர்யா, பேசி பேசியே மாணவிக்குத் திருமண ஆசை காட்டி, அந்த மாணவியைக் கடத்திச் சென்றுள்ளார். பின்னர், மாணவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே பள்ளிக்குச் சென்ற மகளைக் காணவில்லை என்று, அவரது பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடி உள்ளனர்.

அப்போது, ரத்தக் காயங்களுடன் மாணவி வீடு திரும்பி உள்ளார். இதனைப் பார்த்ததும் பதறிப்போன மாணவியின் பெற்றோர், அலறி அடித்துக்கொண்டு, மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, “தான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை” மாணவி அழுத படியே கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார்,  போக்சோ சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, ரத்தம் காயம் ஏற்படும் அளவுக்கு இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.