புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த காதல் ஜோடியிடம் பணம் பறித்த இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா தளமான புதுச்சேரிக்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வருகின்றனர்.

Pondy Policemen suspended for bribing from couple

அப்படி, கடலூரைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்துவிட்டு, காலை முதல் மாலை வரை புதுச்சேரியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். இதனையடுத்து, மாலையில் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் ரூம் எடுத்துத் தங்கி உள்ளனர்.

அப்போது, இரவு பணியிலிருந்த பெரியகடை காவல் நிலைய போலீசார் சதீஷ்குமார், சுரேஷ் ஆகிய இருவரும், இந்த காதல் ஜோடி தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்று சோதனை என்ற பெயரில், இந்த காதல் ஜோடியிடம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் பணம் பறித்ததாகத் தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த காதல் ஜோடி, இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாகப் புகார் அளித்தனர். இதனையடுத்து, உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது. 

இந்த விசாரணையில், போலீசார் இருவரும் மிரட்டி பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் மீதும், துறைரீதியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Pondy Policemen suspended for bribing from couple

அத்துடன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும், இதுபோன்று இன்னும் எத்தனை காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தார்கள்? இதுபோன்று எத்தனை வருடங்களாக மிரட்டி பணம் பறித்து வந்தனர்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரும்பாலும், இதுபோன்று பாதிக்கப்படும் காதல் ஜோடிகள், கவுரவம் பார்த்து புகார் அளிப்பதில்லை. இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பிரச்சனை என்று தெரிந்து, அமைதியாக இருந்துவிடுவது வழக்கம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத இந்த காதல் ஜோடி, தைரியமாகச் சென்று புகார் அளித்ததால், போலீசாரின் இந்த மிரட்டல் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.