துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா, கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்தும், அப்போது தந்தை பெரியார் செய்த செயல்கள் குறித்தும் விமர்சித்துப் பேசினார்.

Court inquires Police Rajinikanth Thuglak speech

இந்த செய்தி, தமிழகம் எங்கும் பரவியது. இதற்குத் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

ஆனால், துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் கூறியது பொய்யான தகவல் என்றும், இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தந்தை பெரியார் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

Court inquires Police Rajinikanth Thuglak speech

மேலும், தந்தை பெரியார் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் நடிகர் ரஜினி பேசியிருக்கிறார் என்று, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலைக் கழகத்தினர் புகார் அளித்தனர்.

ஆனால், புகார் தொடர்பாக நடிகர் ரஜினி மீது, காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த திராவிட விடுதலைக் கழகத்தினர், சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “ பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து, சென்னை காவல் ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.