கொரோனா குறித்து வதந்தி பரப்பினால், வாட்ஸ்ஆப் குழு அட்மின் கைது செய்யப்படலாம் என்று  காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விசயங்கள் எந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறதோ, அதை விட, கொரோனா குறித்த வதந்திகள் வாட்ஸ்ஆப் குழுவில் வேகமாக பரவி வருகிறது.

அப்படி, யாரோ ஒருவர் வாட்ஸ்ஆப் குழுவில் கொரோனா பற்றிய வதந்தியை ஃபார்வட் செய்த நிலையில், அந்த குழுவின் அட்மினை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ளனர். 

coronavirus hoax whatsapp admin police warning

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாட்ஸ்ஆப் குழுவில், ஒரு மெசேஜ் பதியப்பட்டு இருந்தது. அதில், “ கொரோனா வைரஸ் இருப்பதாகச் சந்தேகப்படும் நபர் ஒருவர், சங்கம்நகர் பேருந்து நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதனால், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லவேண்டாம், மாஸ்க் அணிந்து செல்லுங்கள், இல்லையென்றால் வாயில் ஒரு துணியை வைத்துக்கொள்ளுங்கள்” என்று இருந்தது.

இந்த பதிவைப் பார்த்து மன உலைச்சலுக்கு ஆளான அதே குழுவில் உள்ள மற்றொருவர், மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் காவல் நிலையத்தில், கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப் குழுவில் வதந்தி பரப்பப்படுவதாகப் புகார் அளித்தார். 

அந்த புகாரில், “எந்த சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படாத இந்த தகவலைப் பகிர்ந்திருப்பது தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த தகவலைப் பதிவு செய்த வாட்ஸ்ஆப் குழு உறுப்பினர், குழுவின அட்மின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காவல்துறையில் அவர் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட போலீசார், குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் குழுவின் பெண் அட்மின் மற்றும் தகவலைப் பதிவு செய்த பெண் உறுப்பினர் என இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளனர். பின்னர், இது போன்ற வதந்திகளைப் பரப்பக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியும், எச்சரித்தும் அனுப்பி உள்ளனர். 

மேலும், இதுபோன்ற வதந்திகளை வாட்ஸ்ஆப் குழுவில் பரப்பினால், குழுவின் அட்மின் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால், வாட்ஸ்ஆப் அட்மின்கள், தங்கள் குழுவினருக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று, தங்கள் குழுவில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.