தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு ஜூன் 1ல் துவங்கியது. அந்தமான், கேரளா, தமிழகம், கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் பரவி வட மாநிலங்களில் கொட்டியது. மும்பை, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் கன மழையாக கொட்டி, வெள்ள பெருக்கையும் ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

``"இன்று, (அக். 28) தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் சராசரி அளவையொட்டி வடகிழக்கு பருவமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் சராசரி அளவு 44 செ.மீ ஆகும். ஆனால், இந்தாண்டு மழை அளவு சராசரியை ஒட்டியோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (சென்டிமீட்டரில்)

மதுரை மாவட்டம் மேலூர் ஏ.ஆர்.ஜி. 6, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தலா 5, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் 4, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் 3, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, மதுரை மாவட்டம் மேலூர், தேனி மாவட்டம் வீரபாண்டி தலா 2.

வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கும், தெற்கு ஆந்திர பகுதிகளுக்கும், ஒரு ஆண்டுக்கு தேவையான நீராதாரத்தை, வடகிழக்கு பருவ மழை வழங்கும்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.