தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப்பில் 
ஏழு மாதங்களுக்கு முன் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்தில் இந்த பிரச்சினை கடந்த சில வாரங்களாகப் பெரியளவில் பேசப்பட்டது. இதனையடுத்து வீடியோ வெளியிட்டவர்கள் மீது கைது நடவடிக்கையும், குண்டர் சட்டமும் போடப்பட்டது. 

இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பலர்  பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,  பெரியார் சிலையை அவமதிப்பு செய்த கோவையைச் சேர்ந்தவர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாகப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த தொடர் நிகழ்வில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

இந்நிலையில், தற்போது, கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாகக் கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையிலும், இந்து மதம் தொடர்பாகச்  சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தும், இயக்குநரும், நடிகருமான வேலு பிரபாகரன்  வீடியோ ஒன்றை யூ டியூப் தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.  எனவே இதனையடுத்து பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு, சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், வேலு பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு கொடுத்துள்ள புகார் மனுவில், 'யூ டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாகப் பேசி வருகிறார். கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவர் மீது, மத, இன விரோத உணர்வுகளைத் தூண்டுவது, கலகம் செய்யத் தூண்டுவது, மத உணர்வுகளைப் புண்படுத்துவது, தவறான தகவல் மூலம் பொதுமக்களை திசைதிருப்புவது என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மதுரவாயலில் வைத்து இயக்குநர் வேலு பிரபாகரனைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கின்றனர். 
 
-பெ.மதலை ஆரோன்