உலகம் முழுவதும் அசூர வேகத்தில் பரவிவரும் கொரோனோ வைரஸைக் கட்டுப்படுத்த உலகநாடுகள் அனைத்தும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. தமிழகத்தில் குறிப்பாக, சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா உச்சத்தை அடைந்து வருகிறது. அதேபோல்,  சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு நாளும், காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலமாக தற்போது வரை 10 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொடக்கத்தில் பாதிப்பு கண்டறிந்து விட்டதால் நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

சென்னை மாநகராட்சியில் ஜூன் 5ம் தேதி வரை 68 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 42 ஆயிரத்து 309 பேர் குணமடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1054 பேர் மரணம் அடைந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த ஜூன் மாதம் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.  

இதன் ஒரு பகுதியாகச் சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்களைக் கண்டறிய வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தச் சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் பலர் உண்மையைத்  தெரிவிக்காத காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தினம் காலை 8.30 முதல் காலை 11 மணி வரை நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. இதன்பிறகு 11.30 மணி முதல் 1.30 மணி வரை அந்தந்தப் பகுதிகளுக்கே சென்று காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நடமாடும் மருத்துவமனைகள் மூலம் நேரடியாகப் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. இதன்படி சென்னை முழுவதும் தினசரி 500க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.

மே 8 முதல் ஜூலை 3ம் தேதி வரை நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை : 11,877
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை :  7,72,531 
காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளவர்கள் :  35,211
அதிக அறிகுறி இருந்ததால்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் :  31,124
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் : 10,093

வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தது காய்ச்சல் முகாம் மூலம் சோதனை செய்வதன் மூலம் லேசான அறிகுறி உள்ள போதே 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விரைந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும், இவர்களிடம் இருந்து நோய் பரவுவது தடுக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தி பரிசோதனை செய்யும் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இதனால் தினசரி பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் காய்ச்சல் முகாம் தொடர்பான தகவல்களைச் சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து தினசரி சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடக்கத்திலிருந்தே சென்னைதான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்துவரும் சூழலில், இப்போது முகாம்கள் மூலமாக மட்டுமே சென்னையில் இவ்வளவு எண்ணிக்கை கண்டறியப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக நோயாளிகள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது என்பது மட்டுமே ஆறுதலிக்கும் விஷயமாக இருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் நோய் வேகமாக பரவிவருகிறது என்பது வேதனைக்குரிய செய்தி. சூழல் அனைத்தும் சரியாக, மக்கள் அனைவரும் ஒத்துழைப்பது அவசியப்படுகிறது. தனித்திருப்பதும், விலகியிருப்பதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் இப்போதைக்கு அவசியம்.

 

- ஜெ. நிவேதா.