சென்னையில் இன்று கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அமைச்சர் தங்கமணி மற்றும் கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமார் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு இன்னும் குறைந்த பாடு இல்லை. தொடர்ந்து, அதே விகிதத்தில் தான் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாள்தோறும் பதிவாகி வருகிறது.

சென்னையில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அமைச்சர் தங்கமணி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அத்துடன், நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகமும் தற்போது மூடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, தற்போது நடைபெறும் முதலமைச்சர் மற்றும் மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் தமிழக அமைச்சர் தங்கமணி கலந்து கொள்ளவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் மின்சார சீர்திருத்த வரைவு மசோதா குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றன. 

அதே போல், ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம், சென்னையில் இதுவரை 1,300 க்கு மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 பேர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர், சென்ன ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் என அடுத்தடுத்து இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் என மொத்தம் இன்று ஒரே நாளில் தற்போது வரை 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட சற்று குறைந்து காணபட்டாலும், உயிரிழப்ப எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது சென்னை மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அதேபோல், சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,569 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், அண்ணா நகர் மண்டலத்தில் 2,432 பேரும், தேனாம்பேட்டையில் 2,163 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 1,964 பேரும், தண்டையார்பேட்டையில் 1,690 பேரும், திரு.வி.க. நகரில் 1,898 பேரும், அம்பத்தூரில் 1,221 பேரும், வளசரவாக்கத்தில் 1,148 பேரும், அடையாறு மண்டலத்தில் 1479 பேரும், திருவொற்றியூரில் 999 பேரும், ஆலந்தூரில் 951 பேரும், பெருங்குடியில் 882 பேரும், மாதவரம் 829 பேரும், சோழிங்கநல்லூரில் 522 பேரும், மணலியில் 496 பேரும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை தற்போது 71,510 ஆக உயர்ந்து உள்ளது. இதில், சென்னையில் 22,374 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

முக்கியமாக, தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளதாகத் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அதிக பட்சமாக சேலம் மாவட்டத்தில் 184 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னையில் அதிகரித்துக் காணப்படும் கொரோனாவை கட்டுப் படுத்தும் விதமாக மத்தியக் குழு, சென்னைக்கு இன்று வருகை தர உள்ளது குறிப்பிடத்தக்கது.