கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைப்பதற்காக, உலகம் ழுழுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி பல மாதங்களாக ஊரடங்கு, பொது முடக்கம், தளர்வுகள் பொருந்திய ஊரடங்கு போன்றவை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவை போல பல நாடுகளும் இப்படியான ஊரடங்கில்தான் இருக்கின்றன. 

குறிப்பாக கொரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் நாடுகளில் ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவும் நீண்ட கல லாக்டௌணில் இருக்கிறது. ஆஸ்திரிலேயாவில் அதிக நோயாளிகளை கொண்டுள்ள மெல்போர்னில் மட்டும், ஐந்து மில்லியன் மக்களை முடக்கத்துக்கு உட்படுத்தியிருந்தது அந்நாட்டு அரசு. 

இப்போது இந்த மாநிலம், அடுத்த ஆறு வாரத்துக்கு லாக்டௌனுக்குள் செல்லும் என சொல்லப்பட்டுள்ளது. படிப்பு, உணவுத்தேவை, மருத்துவம் ஆகிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல், கஃபே, மதுபானக்கூடங்கள், ஜிம், ஹேர் சலூன், பார்ட்டிகள் போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடலானது, நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை, நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர் அதிகாரிகள். விக்டோரியா என்ற இடத்தின் எல்லையை மூடுவதற்கு முன்பு இது கூறப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில், இந்த இடம் மூடப்படுவது இதுவே முதன்முறை. விக்டோரியா மாநிலத்தின் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ், கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென சொல்லியிருக்கிறார். 

தன் மக்களிடையே இதுபற்றி ஆண்ட்ரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

``நம் மக்கள் பலரும் கொரோனாவை கண்டு பயப்படாமல் இருப்பதை காண முடிகிறது. ஆனால் தயவுசெய்து யாரும் அப்படி இருக்காதீர்கள். நீங்கள் பயப்பட வேண்டும். நீங்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே இதைப்பார்த்து பயப்பட வேண்டும். இது அவ்வளவு கொடுமையான பாதிப்பு. தயவுசெய்து எல்லோரும் வீட்டிலேயே இருங்கள். அவசியமில்லையென்றால், வெளியே வரவே செய்யாதீர்கள். இப்படி இருப்பது உங்களுக்கு கடினமாக் இருக்குமென்று எனக்கு தெரியும், இருந்தாலும் இப்போதைக்கு இதை அனைவரும் செய்யுங்கள். 

11, 12 -ம் வகுப்பு பிள்ளைகளின் பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளின் படிப்பை நினைத்து பயப்படுவதை காணமுடிகிறது. என்னை நம்புங்கள், உங்கள் பிள்ளைகள் அனைவரும் மூன்றாம் Term - ல் நிச்சயம் பள்ளிக்கு செல்வார்கள். அதற்குள் சூழலை நாம் சரிசெய்துவிடலாம். என்னுடைய இந்த முடிவு, அலட்சியத்தால் எடுக்கப்பட்டதல்ல. முழுக்க முழுக்க மக்களின் உடல்நல அக்கறைக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. ஆகவே தயவுசெய்து அனைவரும் சூழலறிந்து செயல்படுங்கள். தொலைபேசி வாயிலாகவோ, இணையம் வாயிலாகவோ உங்கள் குடும்பத்தினரோடு எல்லோரும் தொடர்பிலிருங்கள். உங்களின் குடும்பங்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொண்டே இருங்கள்.

பலரும் இப்போது நாம் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக சொல்கின்றனர். தடுப்பூசி, மருந்துகள் வரும்வரையில் இங்கு எதுவுமே நார்மல் ஆகாது என்பதுதான் நிதர்சனம். ஆகவே யாரும் அலட்சியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். 

இப்படியொரு சூழல் நம் யாருக்கும் ஏற்பட்டிருக்ககூடாது. ஆனால், ஏற்பட்டுவிட்டது. தயவுசெய்து, அலட்சியத்தை கைவிட்டுவிட்டு நிதர்சனத்துக்கு வாருங்கள்!

அரசு கூறியிருக்கும் ஒரு விஷயத்தை நீங்கள் உடைத்தாலும், அது உங்களைத்தான் மீண்டும் பாதிக்கும். உங்களை மட்டுமன்றி, உங்களை உயிரென நினைக்கும் நேசிப்பவர்களையும் அது பாதிக்கும். புரிந்து செயல்படுவீர்கள் அனைவருமென நம்புகிறேன்" எனக்கூறியிருக்கிறார்.

இவ்வளவு கராராகிய பேசியிருக்கும் விக்டோரிய மாநிலத்தில், இதுவரை 8,800 நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர். 106 மரணங்கள்தான் நிகழ்ந்துள்ளன. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிக மிக குறைவுதான். இருந்தாலும், பிற நாடுகளோடு ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாமென்றும், இப்போதே கடுமையாக சட்டம் இயற்றினால்தான் சூழலை சரிசெய்ய முடியும் என்றும் அவர் நினைத்துள்ளார். 

``கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று எங்களால் நடிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார் ஆண்ட்ரூஸ். இவ்வளவு குறைவான நோயாளிகளைக் கொண்ட ஓர் மாநிலத்தின் பிரதமர் இவ்வளவு தீவிரமான முடக்கத்தை அறிவித்திருக்கிறார் என்பது, உலக தலைவர்களிடையே மிக முக்கியமான பேசு பொருளாக ஆகியிருக்கிறது.

- ஜெ.நிவேதா