பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விடிய விடிய துளிகூட இறக்கம் இல்லாமல், பிரண்ட்ஸ் ஆப் போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் செய்திகள் வெளியானது. 

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, இந்த வழக்கில் சம்மந்தபட்ட சாத்தான்குளம் எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை ஆகியோரை சிபிசிஐடி போலீசார் அடுத்தடுத்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்கள் 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அத்துடன், சாத்தான் குளம் லாக்கப் டெத் சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீசார் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், அவர்களுக்கு எதிராக தமிழக முழுவதும் பல கண்டன குரல்களும் எழுந்தன. மேலும், சில இடங்களில், பிரண்ட்ஸ் ஆப் போலீசார் கடந்த காலங்களில் செய்த அட்டகாசங்கள் குறித்தும், தொடர்ந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, “சாத்தான் குளம் லாக்கப் டெத் சம்பவத்தில் தொடர்புடைய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை, தமிழக அரசு கலைக்க வேண்டும் என்று, எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி, தமிழக அரசுக்கு கடந்த வாரம் கோரிக்கை விடுத்தார். 

அத்துடன், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது? யார், யாரை கொண்டு உருவாக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியவில்லை” என்றும் எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் உள்ளவர்கள் லத்தியை தொடவே சட்டத்தில் இடமில்லாத போது, அந்த லத்தியால் தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம்?” என்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரந்தாமன் கேள்வி எழுப்பினார். இதுபோன்று பல்வேறு கண்டன குரல்கள் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டது. 

அத்துடன், கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி முருகன், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு காவல் துறை விசாரணையில் தலையிட உரிமை இல்லை” என்றும், காவல்துறை விசாரணையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தலையிட முடியாது என்றும், அவர்கள் தவறு செய்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், உறுதிபடத் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து, சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்தின் போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் 5 பேர் பணியில் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், அவர்களை அழைத்து விசாரிக்க நினைத்த தென்மண்டல ஐஜி முருகன், சம்பவத்தின் போது பணியில் இருந்ததாக கூறப்படும் 5 பிரண்ட்ஸ் ஆப் போலீசாரையும் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அந்த 5 பேரும் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, தலைமறைவாகி விட்டதாகவும், இதனால் 5 பேரும் விசாரணைக்கு ஆஜராகத நிலையில், அவர்களை தேடிம் பணி தீவிரப்படுத்தப் பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசார், காவல் துறையுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுவது, குற்றவாளிகளைக் கைது செய்வது போன்ற பணிகளில் இணைந்து செயல்பட கூடாது என்று தெரிவித்தார். மேலும், காவல் நிலையத்திற்குள் அவர்களை அனுமதிக்க கூடாது என்றும், அந்த உத்தரவில் கூறி இருந்தார்.

இதே போல், விழுப்புரம் மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தற்காலிகமாக பல அதிரடியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதே போல் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு அதிரடியாக பல்வேறு கட்டுப்பாடுகள விதித்து நெல்லை சரக டிஐஜி பிரவீண் குமார் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், சென்னையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்குத் தடை இல்லை” சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி அதிசய குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சாத்தான் குளம் சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினருக்கு இருக்கும் தொடர்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் குறித்து விளக்கம் அளிக்க தமிழக உள்துறை செயளாலர் மற்றும் டி.ஜி.பி.க்கு அதிரடியாக உத்தரவு பிறபித்தது. 

இந்நிலையில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து, தமிழக அரசு அதிரடியாக இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான் குளம் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மீது, கடும் விமர்சனம் எழுந்ததை அடுத்து, தற்போது அந்த அமைப்பிற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.