கோவையில் தாலியால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியே, கணவனை குத்தி கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வெரைட்டி ஹால் அமைந்துள்ள திருமால் தெருவைச் சேர்ந்த 40 வயதான பிராங்க்ளின் பிரிட்டோவுக்கும், 31 வயதான கரோலின் என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இருவரும் மிகவும் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தனர். கணவன் பிராங்க்ளின் பிரிட்டோ, கோவை பிளமேடு பகுதியில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

பிராங்க்ளின் பிரிட்டோ - கரோலின் திருமண வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருந்த நிலையில், அவர்களது குடும்பத்தில் வறுமை நிலை கொஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடும்பத் தேவைக்காக மனைவி கரோலின் தாலியை, அவரது கணவர் பிராங்க்ளின் பிரிட்டோ அடமானம் வைத்து உள்ளார். ஆனால், குறிப்பிட்டு சொன்ன தேதியில் அந்த தாலியைக் கணவனால் திருப்பித் தர முடியவில்லை.

இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. தாலி அடமானம் வைத்து பல மாதங்கள் ஆகியும் அவற்றைத் திருப்பித் தராமல் கணவன் மிகவும் அலட்சியமாக இருந்ததால், ஆத்திரமடைந்த மனைவி கரோலின், கணவனிடம் இது தொடர்பாக சண்டைக்குச் சென்றுள்ளார். அப்போது, “மெதுவாகத் திருப்பலாம் இப்ப என்ன அவசரம்” என்று, அவரது கணவர் அலட்சியமாகப் பதில் அளித்ததாகத் தெரிகிறது. 

இதனால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கடுமையான சண்டை வந்துள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த கரோலின், வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியால், தன் கணவனின் குத்தி கொலை செய்துள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கணவனை கொன்றது தெரியாமல் இருப்பதற்காக, மனைவி கரோலின் சத்தம் போட்டுக் கூச்சலிட்டு “கணவனுக்கு இப்படி ஆகிவிட்டதே” என்று அழுது புலம்பி நாடகமாடி உள்ளார்.

கரோலின் புலம்பல் மற்றும் அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, பிராங்க்ளின் பிரிட்டோவை அவசர அவசரமாகத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடி உள்ளனர். அங்கு பிராங்க்ளின் பிரிட்டோ பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், “பிராங்க்ளின் பிரிட்டோ எப்படி உயிரிழந்தார்?” என்று, அவரது மனைவி கரோலினிடம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, கணவர் பிராங்க்ளின் பிரிட்டோ கடந்த 2 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார் என்றும், இதனால் அவரது உடல் நிலை மிகவும் பலவீனம் ஆகி இருந்த நிலையில், சமையலறையில் காய்கறி நறுக்கி விட்டுத் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக பின்னால் நின்ற கணவனின் மார்பு பகுதியில் எதிர்பாராத விதமாக கத்தி பட்டு ரத்தம் வந்ததாகக் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், கரோலினை தங்களது பாணியில் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, “குடும்பத் தேவைக்காக அடமானம் வைத்த தாலியை மீட்டுத் தரக்கோரி கணவனிடம் கேட்டதாகவும், ஆனால் அவர் மீட்டுத் தர மறுத்ததுடன் என்னிடம் சண்டை போட்டார் என்றும், இதனால் கோபத்தில் அவரை கத்தியால் குத்தி விட்டேன்” என்றும், கரோலின் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கரோலினை கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.