மதுரை அருகே 12 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள கரடி பட்டியைச் சேர்ந்த 27 வயதான ஓட்டுநர் காசி என்பவருக்கு, சமீபத்தில் தான் திருமணம் ஆகி உள்ளது. தற்போது, காசியின் மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும், தங்கள் வீட்டின் முன்பு உள்ள ட்ரை சைக்கிளில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது, கடும் மது போதையில் அந்த வழியாக வந்த காசி, அந்த சிறுமியை தூங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்துள்ளான். மது போதையில் அவன் இருந்ததால், அந்த சிறுமி மீது காம வயப்பட்டுள்ளான்.

காமம், தலைக்கு ஏறிய நிலையல், அந்த ட்ரை சைக்கிளோடு கீழக்குயில் குடி மலைப் பகுதிக்கு, நைசாக அவன் ஓட்டிச் சென்றுள்ளான். ஆனால், இது எதுவுமே தெரியாத அந்த சிறுமியோ, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார். 

அந்த மலைப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், சிறுமியிடம் திடீரென்று அந்த காமுகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால், பதறிப்போய் கண் விழித்த அந்த சிறுமி, அந்த காமுகனிடம் போராடி உள்ளார். ஆனாலும், விடாமல் இறுக்கிப் பிடித்த அந்த காமுகன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

ஒரு கட்டத்தில், அந்த காமுகனிடமிருந்து தப்பித்து, சிறுமி வீட்டிற்கு ஓடி வந்து உள்ளார். வீட்டிற்கு வந்ததும், அலறித் துடித்த சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், குறிப்பிட்ட இந்த இடத்திற்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு போதையில் தள்ளி நின்ற காசியை, பிடித்த ஊர் மக்கள், சில தர்ம அடிகளைப் போட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட நாகமலை புதுக்கோட்டை போலீசார்,  போக்சோ சட்டத்தின் கீழ் காசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, காசியை மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட 27 வயது இளைஞர் ஒருவர், 12 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள கரடி பட்டி பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.