74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார்.

இந்நிலையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் தந்தை நாராயணசுவாமி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் . ஆனால் காலை 8 மணிக்கு சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கடமை தவறாத காவல் ஆய்வாளர் மகேஸ்வரி யாரிடமும் சொல்லாமல் அணிவகுப்பை முடித்து கொண்டு, பின்னர் தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்படுவதாக கூறிவிட்டு சென்றார். இதனால் அவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கொடியேற்று விழாவில், காவல்துறையின் அணிவகுப்பை சிறப்பாக நடத்தி, வாள் சுழற்றி சல்யூட் வைத்து, கடமையுணர்ச்சியின் சிகரமாகத் திகழ்ந்ததை கண்டு பலரும் உணர்ச்சிவசப்பட்டு வருகின்றனர். கொடியேற்று விழாவில் அங்கிருந்த அதிகாரிகளுக்கு மகேஷ்வரி அடித்த ஒவ்வொரு சல்யூட்டும், இப்போது பொதுமக்கள் - சமூகதளவாசிகள் மூலமாக இவருக்கே திரும்பவும் அடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மகேஸ்வரிக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடமை உணர்வின் அடையாளமாகத் திகழும் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்கு, வணக்கமும் வாழ்த்துகளும்!

கம்பீரமான காக்கி உடுப்பை அணிந்தபிறகு வீட்டுச் சூழ்நிலை எப்படி இருந்தாலும், நாட்டு நிலையும் - பொதுமக்களின் பாதுகாப்புமே முதன்மையானது என்பதை உணர்ந்து செயலாற்றுபவர்களே சிறப்பான காவல் அதிகாரிகளாகத் திகழ்கிறார்கள்.
 
தமிழகக் காவல்துறை எத்தனையோ சிறப்பான காவல் அதிகாரிகளைத் தந்த மாநிலமாக, இந்தியாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.

அந்த வகையில், தங்களின் தந்தையார் நாராயணசாமி இறந்துவிட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியை அறிந்த பிறகும், ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை நாளில் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கொடியேற்று விழாவில், காவல்துறையின் அணிவகுப்பைச் சிறப்பாக நடத்தி, வாள் சுழற்றி சல்யூட் வைத்து, கடமையுணர்ச்சியின் சிகரமாகத் திகழ்ந்ததைத் தமிழகமே போற்றுகிறது.

பாசத்தைவிடக் கடமையே முக்கியம் என்பதை காவல்துறையில் தங்களின் கீழ் பணியாற்றும் மற்றவர்களுக்கும், இனி இந்தப் பணியில் சேர ஆர்வமாக உள்ள தலைமுறையினருக்கும் உணர்த்தியிருக்கிறீர்கள்.

காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு சிறப்புத் துணை ஆய்வாளராக உள்ள தங்கள் கணவரும் குழந்தைகளும் தங்களின் கடமைக்குத் துணை நின்றதை அறிந்த போது மேலும் மதிப்பு கூடியது.

வேதனையை விழுங்கிக் கொண்டு, தேசத்தின் பெருமைக்குரிய தினத்தின் சிறப்பைப் போற்றும் வகையில் செயலாற்றிய தங்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும் தெரிவித்து, தந்தையாரை இழந்து வாடும் தங்களின் துயரில் பங்கேற்கிறேன். காக்கிச் சீருடைக்குரிய கம்பீரமான பணிகள் தொடரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.