பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து சர்ச்சைகளாலேயே ஊடகங்களில் அதிகமாக தென்படுபவர் என்ற பெயர் பெற்றவர். அப்படி சமீபத்தில் கிளம்பியதுதான், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை. அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளே சற்று ஆட்டம் கண்டுபோனர் என்றுகூட சொல்லலாம். ஒருவழியாக இறுதியில், `இனி கட்சி உறுப்பினர்கள் யாரும் இப்படி சுயமாக கருத்து தெரிவிக்க கூடாது' என்ற கட்டுப்பாட்டு அறிக்கை வெளிவந்து, பின் சுதந்திர தினத்தன்று ஒன்றுகூடி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தனர் கட்சியினர். இத்தனை சர்ச்சைகளுக்கு இடையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில நல்ல விஷயங்களையும் செய்கின்றார் என்பதும் மறுப்பதற்கில்லை. அப்படி, குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் அவர் செய்த ஒரு நல்ல விஷயம் இப்போது கவனம் ஈர்த்துள்ளது.

அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்த ஒரு நல்ல விஷயம் தெரிந்து காங்கிரஸ்காரர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி வகித்தவர் ஆர். குருசாமி. சிறந்த பேச்சாளரான ஆர்.குருசாமி காங்கிரசுக்காக கடுமையாக உழைத்தவர். பாத யாத்திரை, சைக்கிள் பயணங்கள் என்று காங்கிரஸுக்காக இவர் விருதுநகர் மாவட்டத்துக்குள் அலையாத ஏரியாவே இல்லை. காங்கிரஸ் எம்பியாக ஜெயலட்சுமி இருந்த காலத்தில் தீவிரமான கட்சிப் பணியாற்றியவர் குருசாமி. மேலும் தற்போதைய காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூரோடும் நெருக்கமானவர்தான். ஆனாலும் குருசாமி உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு கை கொடுப்போர் யாருமில்லை.

78 வயதான வாய்ச்சவடால்’ குருசாமி, முதுமையின் காரணமாக உடல்நல பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாத அவரது தற்போதைய நிலையை, அவர் வசித்துவரும் சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

உடனடியாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று (ஆகஸ்டு 18) சித்துராஜபுரம் ராமசாமி நகரிலுள்ள குருசாமியின் வீட்டுக்குச் சென்றார். குருசாமியின் உடல் நிலை பற்றி விசாரித்துவிட்டு, அவரது மருத்துவ செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துவிட்டு, சிறிது நேரம் பழைய ஞாபகங்களை எல்லாம் பேசிவிட்டுப் புறப்பட்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசும்போது, ``அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவி செய்வதற்காக குருசாமி வீட்டுக்குப் போனது காங்கிரஸ் காரங்களுக்கே தெரியாது. ரொம்ப நல்ல விஷயம் செஞ்சிருக்காரு. அவருக்கு நன்றி. மாணிக் தாகூர் எம்பியா இருக்குற இந்தத் தொகுதியில அவருக்கு நெருக்கமான காங்கிரஸ்காரருக்கு அதிமுக அமைச்சர் உதவி செஞ்சிருக்கிறதை காங்கிரஸ் காரங்க கவனிக்கணும்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

விருதுநகர் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “ராஜேந்திர பாலாஜி ஒரு பக்கம் சர்ச்சைகளில் அடிபட்டுக் கொண்டே இருந்தாலும் மாவட்ட அளவுல கட்சி பேதம் பார்க்காமல் இப்படிப்பட்ட உதவிகளை செய்யக் கூடியவர்தான். மாவட்ட அரசியலின் முன்னோடிகள்ங்குற விஷயத்துல நலிந்த அரசியல்வாதிகளுக்கு என்ன கட்சினு பார்க்காம வீடு தேடிச் சென்று பல முறை அவர் உதவியிருக்காரு. திமுகவைச் சேர்ந்தவர்களுக்குக் கூட உதவியிருக்காரு” என்கிறார்கள்