கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மருத்துவமனையில் அனுமதி! கலங்கிப்போன திமுக..

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மருத்துவமனையில் அனுமதி! கலங்கிப்போன திமுக.. - Daily news

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நியைில், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் விழா, இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன், திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

மருத்துவமனையில், சண்முகநாதனுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், சண்முகநாதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் கருணாநிதியின் நிழல் போல இருந்த சண்முகநாதன். 

கருணாநிதியின் கோபாலபுரம் வீடு தொடங்கி மற்றும் தமிழகத்தின் அரசியல் மேடைகள் தொடங்கி,  செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, கருணாநிதி செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவருக்குத் தேவையான உதவிகளை சண்முகநாதன் செய்து வந்தார். இதனால், திமுகவில் சண்முகநாதனை தெரியாத தொண்டர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு, திமுக தொண்டர்களுக்கு சண்முகநாதன் எப்போதுமே நல்ல பரிச்சயம்.

இப்படியான நிலையில் தான், அதுவும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று, அவரது உதவியாளர் சண்முகநாதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் மத்தியிலும், சக திமுக தொண்டர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சண்முகநாதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சற்று முன்பாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

அப்போது, உதயநிதி ஸ்டாலினின் கரங்களைப் பற்றிக்கொண்ட சண்முகநாதன், அவரது பணிகளைப் பாராட்டி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் கூறினார்.
 
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியில், “முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரிய மாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்” என்றும், பதிவிட்டு உள்ளார்.

மேலும், சண்முகநாதன் விரைவில் பூரண நலம் பெற திமுக தொண்டர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment