முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உருக்கமான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு  நல திட்டங்களை இன்று முதலமைச்சர் இன்று ஒன்றன் பின் ஒன்றாகத் துவக்கி வைத்து வருகிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் “தலைநிமிர்ந்து வருகிறேன்” என்கிற தலைப்பில், தனது குரலில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திருவாரூரில் கருவாகி தமிழகத்தையே தனது ஊராக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர்; முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர். முத்தமிழ் கலைஞர் அவர்களே, இன்று ஜூன் 3 ஆம் தேதி, உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல, உயிரினும் மேலான கோடிக்கணக்கான உடன் பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“அதனால் தான், கழகத்தின் கண்மணிகளாம் கருப்பு சிவப்பு தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனி பிறந்த நாட்கள் இல்லை. எல்லோருக்கும் பிறந்தநாள் இந்த ஜூன் 3” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தமிழ் தாலாட்டில் உங்கள் கண்ணான அண்ணனாம் பேரறிஞருக்குப் பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எனது ஆரூயிர் தலைவரே, இந்த ஜூன் 3 நான் கம்பீரமாக வருகிறேன். உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்லத் தலைநிமிர்ந்து வருகிறேன்” என்று, பெருமையோடு கூறியுள்ளார்.

“நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னைக் கவனிப்பதாகத் தான் என எப்போதும் நினைப்பேன். கோட்டையைக் கைப்பற்றிய அடுத்த நாளே, கொரோனாவை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று நீங்கள் உருவகப்படுத்தினீர்கள். அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“உங்கள் சொல் எனக்கு சாசனம்; உங்கள் வாழ்க்கை எனக்கு பாடம்; உங்கள் பாராட்டே எனக்கு உயிர் விசை; உங்கள் குரலே எனக்குத் தேனிசை. உங்களது வார்ப்பான நான் இந்த ஜூன் 3, உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே?'” என்று, மிகவும் உருக்கமாக அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவை பார்க்கும் கட்சித் தொண்டர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருக்கும், இந்த வீடியோ ஒருவிதமான நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருவதுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவிற்கு பலரும் பரட்டுக்களையும், தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.