தேர்தலில் வாக்குறுதிகள் என்ன செய்யும்?

தேர்தலில் வாக்குறுதிகள் என்ன செய்யும்? - Daily news

ஒரு வழியாக பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை முதல் கட்ட தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிட்டு விட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் வாக்குறுதிகளையும் பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளையும் குறித்து சாதாரண மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் ஏழை குடும்பங்களுக்கு ஒரு லட்சம் வருடம்தோறும் கொடுப்பதாக சொன்ன வாக்குறுதி, நீட் தேர்வை மாநிலங்களே தீர்மானிக்கலாம் என்கிற வாக்குறுதிகள் சாதாரண மக்களைக் கவர்ந்துள்ளன. 

பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்ன என்று மக்களிடம் கேட்கையில், சிஏஏ அமல்படுத்தப்படுவதும், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடு மாற்றப்படும் என்பதும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும் என்பதும் மக்களுக்கு அதிகம் நினைவில் இருப்பது தெரிகிறது. 

சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் அரசு மக்களுக்கு என்ன செய்யும் என்பதைச் சொல்பவை. பாஜக கொடுத்திருக்கும் வாக்குறுதி மக்கள் அரசுக்கு என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்கிறவை. 

அதாவது பாஜகவின் வாக்குறுதி படி நாடு மூன்றாம் பொருளாதாரமாக உயரும், அதனால் மக்களுக்கு என்ன கிடைக்கும் என்பதெல்லாம் பொருட்டல்ல. அவர்கள் கண்ணோட்டத்தின்படி நாட்டுக்காகத்தான் மக்கள், மக்களுக்காக நாடு கிடையாது. தேசபக்திப் படம் பார்ப்பவனின் மனநிலையில் இது பெரிய வீர வசனம் போல தோன்றும். 

சிஏஏ அமல்படுத்தப்படுவதும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதும், மூன்றாவது பொருளாதார சக்தியாக உயர்வது என்பதும் சாதாரண மக்களின் இன்றைய தேவைக்கு எதைக் கொடுக்கும் எனும் கேள்விக்கு பதிலே கிடையாது. அதனை விவரிக்கும் போதுகூட, பாஜக குறிப்பிடுவது இது 2047 ஆம் ஆண்டுக்கான தயாரிப்பு பணிகள் மட்டுமே என்று முடித்துக் கொள்கிறார்கள். 

வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவை மக்கள் தினசரி வாழ்வோடு நேரடியாக தொடர்புடையவை. அவற்றின் அடுத்த ஐந்தாண்டு கால தேவைகள் குறித்து எந்த கரிசனமும் பாஜகவின் வாக்குறுதிகளில் இல்லை. மக்கள் நலத் திட்டங்கள் என்பது பாஜக வேண்டா வெறுப்பாக பார்க்கும் ஒரு அம்சம் என்பது உலகு அறிந்த விசயம். 

பாஜக தேர்தல் அறிக்கை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறது. உங்கள் எதிர்காலம் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லாமல், எங்களால் வெற்றி பெற்றுவிட முடியும் எனும் இறுமாப்பே பாஜக தேர்தல் அறிக்கை வாக்கியங்களில் வெளிப்படுகின்றன. 

நாட்டின் இன்றைய சூழலிலும் எதிர்கட்சி தலைவர்கள் மீனும் ஆட்டுக்கறியும் சாப்பிடுகிறார்கள் என்பதை மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கால் தேர்தல் பிரச்சினையாக மாற்ற முடிகிறது. காரணம் மக்கள் பிரச்சினை குறித்து கவலைபடாமல் அவர்களால் வெல்ல முடிந்திருக்கிறது. மக்களை மையப்படுத்திய வாக்குறுதிகள் மீதான பாஜகவின் ஒவ்வாமையே ஒரு நாடு ஒரு தேர்தல் எனும் திட்டத்தை முன்வைப்பதற்கான காரணம். 

உண்மையான இந்தியன் என்றால் இந்த பதிவை ஷேர் பண்ணவும் எனும் வாட்ஸ்அப் பகிர்வை போல தேர்தலும் அவர்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும் போல தெரிகிறது. 

இந்திய வாக்காளர்களின் வாழ்வாதாரத் தேவைகள் குறித்த கரிசனம் கட்சிகளிடமிருந்து வெளிப்படுவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தேர்தல் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கிறது. அதன் காரணமாகவே பல்வேறு மாநிலக் கட்சிகள் மக்களை மையப்படுத்திய வாக்குறுதிகளை கொடுக்கின்றன. அதில் பாதியையாவது செய்தாக வேண்டிய சூழலும் இருக்கிறது. 

இந்தியா கூட்டணி கட்சிகள் அல்லது மற்ற எதிர்க்கட்சிகள் கூட தங்களது தேர்தல் வாக்குறுதிகளை இதே கண்ணோட்டத்தில் வைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. மக்களின் இன்றைய சூழலை தேவையை மையப்படுத்தி தரப்படும் வாக்குறுதிகள் புறந்தள்ளப்பட்டு வெறும் தேசிய உணர்வை மட்டுமே பிரச்சாரமாக மாற்றுவோர் வென்றால் அது நாளைய அரசியலுக்கு என்ன செய்தியை கொடுக்கும்? பாஜகவின் நாட்டுக்காக தான் மக்கள் மக்களுக்காக நாடு அல்ல எனும் கண்ணோட்டம் மீண்டும் வெற்றி பெறும் பட்சத்தில் சமானிய மக்களின் தேவைகள் குறித்து இந்திய அரசியலில் எஞ்சி இருக்கும் முக்கியத்துவம் இனி வரும் காலங்களில் இல்லாமலே போகக்கூடும்.

Leave a Comment