அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, கிராம/வார்டுசபைக் கூட்டங்களின், முதல் நாளில் பெற்ற வெற்றியின் தொடக்கத்தை, தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம்! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் , 
“அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, 200 தொகுதிகளின் வெற்றி இலக்குடன், 16 ஆயிரம் ஊராட்சிகள் - வார்டுகளில் நடைபெறும் கிராம/ வார்டு சபைக் கூட்டங்களின் தொடக்க நாளான நேற்று (டிசம்பர் 23), பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் காஞ்சிபுரம் (வடக்கு) மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் (தெற்கு) ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றேன்.

கிராமசபைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியெங்கும் மக்களின் சிறப்பான, எழுச்சி மிகு வரவேற்பு. அது தனிப்பட்ட முறையில் எனக்கானது என்று நான் எண்ணவில்லை. தமிழக மக்கள் மிகத் தெளிவான முடிவுடன், ஆட்சி மாற்றத்தை உருவாக்கிடத் தயாராக இருக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில், அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய இயக்கம், திமுகதான் என்பதில் திடமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் அழகிய வெளிப்பாடுதான் மக்கள் தந்த மனமார்ந்த வரவேற்பு.

ஊருக்குள் நுழைகின்றபோது, ஒரு கல்வெட்டைக் கவனித்தேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்லவர் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுகள் உண்டு. முடியாட்சியிலும் ஊராட்சி ஜனநாயகம் காத்த சோழர் காலத்துக் கல்வெட்டுகள் உண்டு. ஆனால், நான் பார்த்த கல்வெட்டு என்பது, தமிழகத்தின் இருண்ட காலமான அதிமுக ஆட்சியின் கல்வெட்டு. அதுவும் ஊழலில் உச்சம் தொடுவதில், மற்ற துறைகளுடன் போட்டி போடும் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், விளையாட்டுத் திடல் அமைப்பதற்காக, நாட்டப்பட்ட கல்வெட்டு.

2018-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2019-ம் ஆண்டிலே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கைப்பந்து - கபடி - பூப்பந்து மைதானங்கள் அமைப்பதற்கான கல்வெட்டு மட்டும்தான் இருக்கிறது; மைதானங்களைக் காணவில்லை. முதல்வர் தொடங்கி, ஒவ்வொரு அமைச்சரும் ஆடிய ஊழல் சடுகுடு விளையாட்டுகளால், தமிழகத்தையே துடைத்துப் பொட்டல் திடலாக்கிவிட்ட அதிமுக ஆட்சியாளர்கள், எப்படி விளையாட்டுத் திடலைக் கட்டுவார்கள்?

பொய் வாக்குறுதிகள் - புரட்டுத் திட்டங்கள் - பெட்டி பெட்டியாய்க் கொள்ளை என, ஏறத்தாழ பத்தாண்டுகளாகத் தமிழகத்தை, தொடர்ந்து இருளில் தள்ளியவர்களை, தேர்தலின் மூலம் வெளியே தூக்கி எறிய வேண்டும் என்பதே, குண்ணம் முதல் குமரிவரை தமிழகத்தின் அனைத்துப் பகுதியில் உள்ள மக்களின் ஒரே தீர்மானமான எண்ணமாக இருக்கிறது. அதன் அர்த்தம் நிறைந்த வெளிப்பாடுதான், உங்களில் ஒருவனான எனக்கு அவர்கள் தந்த வாஞ்சைமிகு வரவேற்பு.

கிராம / வார்டு சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அறிவித்து இரண்டு நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில், மக்களை நோக்கி திமுக நிர்வாகிகள் எந்த அளவில் என்ன வேகத்தில் பயணித்திருக்கிறார்கள் என்பதை அறிய, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் மேற்கொண்டிருந்த பணிகள் எடுத்துக்காட்டின.

கிராமசபைக் கூட்டம் குறித்து, ஊர் மக்களிடம் எடுத்துரைத்து, துண்டறிக்கைகளை வழங்கி, தீர்மானத்தை விளக்கி, கூட்டத்தில் பங்கேற்பதற்கான தொப்பி உள்ளிட்டவற்றை அளித்து, மிகச் சிறப்பான ஏற்பாட்டினைச் செய்திருந்தார்.

எளிமையான முறையிலும் - இயற்கையான, இயல்பான வகையிலும் தொடங்கிய குண்ணம் கிராமசபைக் கூட்டத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பங்கேற்றிருந்தது, மக்களின் மன ஓட்டத்தையும், திமுகவின் வலிமையையும், பொலிவு பொங்கிடப் புலப்படுத்துவதாக இருந்தது. உங்களில் ஒருவனான நான் - அவர்களில் ஒருவனாக சரளமாக உரையாடினேன். நான் பேசினேன் என்பதைவிட, அவர்கள் பேசியதைக் கேட்டேன், கருத்தொன்றிக் கவனித்தேன், மன ஏட்டில் எழுதிப் பதிய வைத்துக்கொண்டேன் என்று சொல்வதுதான், பொருத்தமாக இருக்கும்.

கஜேந்திரன் என்ற வயது முதிர்ந்த விவசாயி, தனது கருத்துகளைத் தெரிவிக்கும்போது, அதிமுக ஆட்சியில் விவசாயிகள் படுகின்ற வேதனைகளை வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தவர், எல்லாவற்றுக்கும் காரணம் “மினிஸ்டர் டெண்டர்கள்”தான் என்றார். மூடி முத்திரையிடப்பட்ட டெண்டர், இ- டெண்டர் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோமே, அது என்ன மினிஸ்டர் டெண்டர் என்று அறிந்துகொள்ளும் ஆவலுடன் அவரிடம் நான் கேட்டபோது, “அதிமுக அமைச்சர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே கொடுக்கின்ற டெண்டர்தான் மினிஸ்டர் டெண்டர்” என்றார்.

அதிமுக ஆட்சியாளர்கள் எப்படி வகை வகையாகக் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை, கிராமத்து மக்கள் எத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு கஜேந்திரனின் வார்த்தைகள் சாட்சியாக இருந்ததைப் பார்க்க வியப்பு மேலிட்டது. அவரைப் போலவே விவசாயி ஞானசேகரனும் இந்த ஆட்சியால் படும் துன்பங்களை எடுத்துரைத்தார். பாரதிவரதன் என்பவர் திமுக ஆட்சியில் கிடைத்த வேலை வாய்ப்புகளையும், அதிமுகவை ஆட்சியில் வாய்ப்புகள் பறிபோயிருப்பதையும் எடுத்துக் காட்டினார்.

விளையாட்டு மைதானத்திற்காகக் கல்வெட்டு மட்டும் நட்டுவிட்டு, பணத்தைக் கொள்ளையடித்துவிட்ட ஆளுங்கட்சியினர் பற்றியும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், பார்த்திபன் என்பவர் எடுத்துச் சொன்னார். மருத்துவர் ஓவியா என்பவர், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். முதல் கோரிக்கை, குண்ணத்தில் ஆரம்பசுகாதார நிலையம் இல்லை என்பதையும், அவசர சிகிச்சைக்காக 10 கி.மீ. தூரம் சென்றாலும் அங்கும் சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் - செவிலியர்கள் இல்லை என்பதாகும்.

அவரிடம் மினி கிளினிக் திறப்பு பற்றிக் கேட்டேன். மினி கிளினிக் என்பதைப் பெயருக்குத்தான் அறிவித்திருக்கிறார்கள் என்பதையும், அங்கும் டாக்டர் இல்லை என்பதையும் சொல்லி, மினி கிளினிக் திட்டத்தின் பெயரால், காசு மட்டும்தான் எடுத்திருக்கிறார்கள் என்றார். தலைவர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் எந்த அளவு மக்களின் உயிர் காத்தது என்பதையும், தற்போதைய காப்பீட்டுத் திட்டம் மக்களின் உயிரைக் காவு வாங்குவதையும் எடுத்துரைத்தார்.

அடுத்த கோரிக்கையாக, நுழைவுத் தேர்வை ரத்து செய்த தலைவர் தலைமையிலான திமுக ஆட்சியினால் அவர் பல் மருத்துவம் படித்ததையும், தன்னைப் போலப் பலரும் மருத்துவர்களானதையும் எடுத்துக்கூறி, நீட் தேர்வை முதன் முதலாக அனுமதித்த எடப்பாடி அதிமுக அரசினால் - லட்சக்கணக்கில் பயிற்சி வகுப்புக்காகச் செலவு செய்ய வேண்டியிருப்பதையும் - எல்லோராலும் அது இயலாது என்பதால்-மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து, சமையல்காரர் வீட்டுப் பிள்ளைகள் சமையல்காரர்களாகவும், தூர் வாருகிறவரின் பிள்ளைகள் தூர்வாரவும் வேண்டும் என்ற பரிதாபமான நிலையை உருவாக்கிவிட்டார்கள் என்பதையும் சொன்னார்.

கல்விக்கடனைக் கட்டுவதா, நீட் தேர்வுப் பயிற்சிக்குச் செலவு செய்வதா, சீட் கிடைத்தாலும் அதற்காகத் தனியார் கல்லூரிக்கான கட்டணத்தைச் செலுத்துவதா எனக் கேட்டதுடன், உங்களில் ஒருவனான என் செயல்பாடுகளை அனைத்து சமூக வலைதளங்களிலும் கூர்ந்து கவனிப்பதாகவும் கூறினார்.

மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீட்டுத் தீர்மானத்தைக் கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தினால், அரசாங்கம் அதனை நிறைவேற்றுகிறது. கல்லூரிகளைத் திறந்தால் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் என உங்களில் ஒருவனான நான் அறிவித்தால், அதற்கடுத்த இரண்டு நாளில் கல்லூரித் திறப்பை அரசு கைவிடுகிறது என்பதை மிக உன்னிப்பாகக் கவனித்துத் தெரிவித்தார் டாக்டர் ஓவியா.

“கவர்மெண்ட் ஸ்கூலில் படித்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களால் கட்டணம் செலுத்த இயலவில்லை என்றால் அதனை திமுகவே செலுத்தும் என்று நீங்கள் அறிவித்ததும், உடனே அவங்க சைடிலிருந்து அரசாங்கமே கட்டணம் செலுத்தும் என்று சொல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொன்றையும் நீங்க சொல்லி அவங்க செய்றதுக்கு, நீங்களே முதல்வராக வந்தால் இன்னும் அதிகமாக மக்களுக்குச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். இதே நம்பிக்கையைத்தான் குண்ணம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பேசிய ப்ரியா, விக்னேஷ், ராஜேந்திரன், ரேவதி உள்ளிட்டோர் தங்கள் கிராமத்து மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக எடுத்துரைத்தனர். அவர்களின் குரலில், பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் பட்டபாட்டின் வேதனை பளிச்செனத் தெரிந்தாலும், அடுத்து அமைய இருப்பது திமுக ஆட்சிதான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒளிர்ந்தது.

அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதியினை அவர்களுக்கு அளித்ததுடன், அதற்கு வழியமைக்க வேண்டுமென்றால், ஊழலில் திளைத்துள்ள “அதிமுகவை நிராகரிப்போம்” என்பதை, பத்து முழக்கங்களை முன்வைத்து எடுத்துரைத்தேன்.

•விவசாயிகளை வஞ்சித்த அதிமுகவை நிராகரிப்போம்

•வேலையில்லாமல் திண்டாடவிட்ட அதிமுகவை நிராகரிப்போம்

•தாகத்தில் தவிக்கவிட்ட அதிமுகவை நிராகரிப்போம்

•சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கச் செய்த அதிமுகவை நிராகரிப்போம்

•கஜானாவைச் சுரண்டி காலி செய்த அதிமுகவை நிராகரிப்போம்

•கல்வியையும் சுகாதாரத்தையும் தரம் இழக்கச் செய்த அதிமுகவை நிராகரிப்போம்

•பெண்களின் உரிமைகளைப் பறித்திட்ட அதிமுகவை நிராகரிப்போம்

•சமூக நீதியைச் சிதைத்த அதிமுகவை நிராகரிப்போம்

•தமிழர்களின் பெருமைகளைச் சீரழித்த அதிமுகவை நிராகரிப்போம்

•ஆட்சி செய்யத் தகுதியற்ற அதிமுகவை நிராகரிப்போம்.

இந்தப் பத்து முழக்கங்களையும் அங்கே திரண்டிருந்தோர் ஒட்டுமொத்தமாக முழங்க, மக்களின் ஏகோபித்த குரல் ஒலியுடன், “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அங்கிருந்த பதாகையில், அதற்கான கையெழுத்திடுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. மக்களோடு மக்களாக உங்களில் ஒருவனான நானும் அதில் கையெழுத்திட்டேன்.

16 ஆயிரம் ஊராட்சிகளுக்கான கிராம/ வார்டு சபைக் கூட்டங்களில் முதல் நாளான டிசம்பர் 23 அன்று மட்டும், 1166 கூட்டங்கள் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றன. இதில் பங்கேற்றும், இணையம் வழியாகவும், “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை ஆதரித்திருப்போரின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரம் பேர். ஏறத்தாழ 10 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் முதல் நாளில் திமுகவில் இணையும் ஆர்வத்துடன் அலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளனர்.

முதல் நாளில் மட்டும் நேரடியாக 30 லட்சத்து 40 ஆயிரம் மக்களும், இணைய வழியாக 1 கோடியே 80 லட்சம் பேரும் கிராம/ வார்டு சபைக் கூட்டங்களைக் கவனித்துள்ளனர். மொத்தமாக 2 கோடியே 10 லட்சம் பேரைக் கடந்துள்ளது. நாளை இதேபோல திண்டிவனம் தொகுதி மரக்காணம் பேரூராட்சியில் நடைபெறும் வார்டுசபைக் கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன்.

விடியலுக்கான தொடக்கப்புள்ளியாகவும், வீணர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாகவும் அமைந்துள்ள இந்த கிராம/ வார்டு சபைக் கூட்டங்களின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருப்பது மக்கள் தந்த மனமார்ந்த பேராதரவாகும். அந்த ஆதரவு நீடித்திடவும், நிலைத்திடவும் ஜனவரி 10 வரை தொடர்ந்து பயணிக்க வேண்டியது திமுகவினரின் கடமையாகும். 16 ஆயிரம் ஊராட்சிகள் - வார்டுகளிலும் கிராம/ வார்டு சபைக் கூட்டங்களை முழுமையாக நடத்தி, மக்களின் குறைகளைக் கேட்டிட வேண்டும்.

அதிமுகவை நிராகரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அவர்களிடம் துண்டறிக்கைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரமாகவும் எடுத்துரைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக நானும், மக்களோடு இணைந்து நாமும் தொடர்ச்சியாகப் பயணிப்போம். நம்மை விட ஆர்வமாக உள்ள அவர்களின் ஆட்சி மாற்றக் கனவை நிறைவேற்றுவோம். கிராம/ வார்டு சபைக் கூட்டங்களின் முதல் நாளில் பெற்ற வெற்றியின் தொடக்கத்தை, தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அதிமுக ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம்! முதல் நாள் வெற்றி, முழுமையான வெற்றி; இந்த வெற்றி, தொடர்ந்து எப்போதும் நம்முடையதே” என்று கூறியிருக்கிறார்.