தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் இரண்டாவது முறையாகச் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் ஆண்கள் 117 , பெண்கள் 117 என சம வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர். 


கட்சியின் தலைவர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது,  அத்துடன் அவரது சொத்து விவரம் அடங்கிய பிராமண பத்திரமும் தாக்கல் செய்தார். 


கடந்த நான்கு ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1000 ரூபாய் மட்டுமே எனக் குறிப்பிட்டிருந்தார். தொழில் அல்லது வேலை விவரங்களில் திரைப்பட இயக்குநர் மற்றும் விவசாயி என்றும் வருவாய்க்கான ஆதாரத்தில், திரைப்படம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் கடந்த ஒரு வருடத்தில் சீமான் 1000 ரூபாய் வரி கட்டியுள்ளேன் என்றும் மனைவி 72 ஆயிரத்து 820 ரூபாய் வரி கட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.  


இதில் ஆண்டு வருமானம் 1000 ரூபாய் என்று தெரிவித்து இருந்தது விவாத பொருளாக மாறியது. ஆண்டு வருமானம் 1000 ரூபாய் என்பதில் உண்மை இல்லை என்றும்.. வேட்பு மனுவில் குறைவாகத் தான்  சொத்து விபரங்களைக் கணக்குக் காட்டுவார்கள், ஆனால் இவ்வளவு குறைவாகச் சொன்னால் எப்படி? என்றும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. சில மீம்ஸ்களும் பகிரப்பட்டது. 


இந்நிலையில் சீமானின் வழக்கறிஞர் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில்  சீமானுக்கு ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் என திருத்தி தாக்கல் செய்து உள்ளனர். 


முன்னராக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது தட்டச்சு பிழையால் ஆண்டு வருமானம் கணக்கு தவறாக இடம்பெற்று விட்டதால் அதனைத் திருத்தி மீண்டும் ஒரு வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளோம் என்று சீமானின் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.


மேலும்,சீமானின் ஆண்டு வருமானம் 2,60,000 ரூபாய். இதற்காக அவர் கட்டிய வருமான வரியே 1000 ரூபாய். இந்த 1000 ரூபாய் தான் தட்டச்சு பிழையால் மாற்றி குறிப்பிடப்பட்டுவிட்டது என்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.