“கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக, என் புருசன் வீட்டுக்கு வர்றதே இல்லை” என்று, மருத்துவரான கணவன் மீது, அரவது மனைவி வழக்குத் தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலானது, இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பல விதங்களிலும் எதிர் பாரத தாக்கங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவரின் குடும்பத்திலும் விதி விளையாடி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஒருவர், அங்கு நுண்ணுயிரியல் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், அவரது கணவர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது, அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் கணவரான மருத்துவர், கொரோனா முன்களப் பணியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால், அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தினமும் 18 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்திருக்கிறார்.

இதனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடனும் பேசாமல் அவர் குறிப்பிட்ட இடைவெளியுடனும் இருந்து வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், தன் கணவனின் இந்த திடீர் மாற்றம் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான மனைவியான பேராசிரியை, தனது கணவரை தொடர்புகொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இன்னும் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனையடுத்து, சற்று யோசித்த அவரது மனைவி, தன் கணவன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் கணவரான மருத்துவர் மீது, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு மகாராஷ்டிரா மாநில உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கார்னிக் அமர்வு, காணொலி காட்சி மூலம் வழக்கை விசாரித்தது. 

அப்போது, நீதிபதிகள் நடத்திய இந்த விசாரணையில், “பேராசிரியை, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்து கொரோனா தொற்று பரவல் காரணமாக, என் கணவர் பல மருத்துவமனையிலேயே பணியாற்றி வந்தார். தீடிரென ஏற்பட்ட இந்த மாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்குள் மன அழுத்தமும், ​பதற்றமும் அதிகமாகிவிட்டது. இதனால், அவர் மீது தவறான புரிதல்கள் எனக்கு ஏற்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், நான் சிறப்பு ஆலோசனைக்கு மேற்கொண்டேன். அதன் பிறகு, நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம்” என்று, கூறினார்.

இதனையடுத்து, பேசிய நீதிபதிகள், “கணவன் - மனைவி ஆகிய இருவரின் இந்த முடிவால், நீதிமன்றம் மகிழ்ச்சி அடைவதாக” குறிப்பிட்டனர்.

மேலும், “தனிப்பட்ட வாழ்க்கையையும், குடும்பத்தையும் பிரிந்து கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும், இப்படிப்பட்ட நெருக்கடியில் மருத்துவர்கள் இரவும் பகலும் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் மிகுந்த மரியாதைக்கு உடையவர்கள்” என்றும், புகழாரம் சூட்டினர்.

இதனையடுத்து, கணவன் - மனைவி இருவரும் ஒத்துப்போனதால், நீதிமன்றம் கணவர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.