நிவர் புயல் கன மழை எதிரொலியாக சென்னையில் வீடுகளுக்குள் 100க் கணக்கான பாம்புகள் புகுந்ததால் சென்னை மக்கள் கடும் பீதியடைந்தனர். 

வங்க கடலில் கடந்த 23 ஆம் தேதி உருவான நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால், சென்னை முழுவதும் வெள்ளக் காடாகக் காட்சி அளித்தன. 

இந்த கன மழைக்கு, சென்னையின் முக்கிய சாலைகள் பெரும்பாலும், மழை நீரில் மூழ்கியது. பல இடங்களில் மழை நீர் வடிகால் வசதியின்றி, அப்படியே சாலையில் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிக்கள் தங்களது காவணங்களை இயக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

குறிப்பாக, இந்த கன மழையால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பல நீரில் மூழ்கின. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 

அப்படி, மழை நீர் புகுந்த பல வீடுகளில் பாம்புகள் புகுந்தால், வீட்டில் வசித்து வந்தவர்கள் கடும் பீதியடைந்து, அவதியடைந்தனர்.

அதன் படி, சென்னையில் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டதாக சுமார் 123 அழைப்புகள், கிண்டி வனத்துறைக்கு வந்து உள்ளன. 

இதையடுத்து, கிண்டி வனத் துறையில் இருந்த பாம்பு பிடிக்கும் நபர்கள் சென்று நேரில் சென்று, பாம்புகளை லாவகமாகப் பிடித்தனர். இதில் நல்ல பாம்புகள், சாரை பாம்புகள், தண்ணீர் பாம்புகள், வில்லிகோல் வரையன் பாம்புகள், பச்ச பாம்புகள் உள்ளிட்ட 100க் கணக்கான பாம்புகள் பிடிப்பட்டன. பிடிக்கப்பட்ட பாம்புகள் காப்பு காடுகளில் விடப்பட்டதாக, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையின் காரணமாக, குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்தால் உடனடியாக கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அறிவிக்கப்பட்டு அதற்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டன. அதன் படியே, வனத்துறைக்கு 123 அழைப்புகள் வந்திருக்கின்றன.

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின் போது, இது போலவே பல இடங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்ததாகக் கூறப்பட்டது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த ஆண்டு பாம்புகளைப் பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வனத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் தொடர் மழை காரணமாக வீடுகள், கார் பார்க்கிங் ஆகிய இடங்களில் பாம்புகள் வரக்கூடும் என்றும், அவற்றைக் கண்டு அச்சமடையவோ, அவற்றை அடித்துக் கொல்லவோ வேண்டாம்” என்றும், கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

அத்துடன், “30 க்கும் மேற்பட்ட பாம்பு வகைகளில் 4 வகை மட்டுமே ஆபத்தானவை என்றும், அதனால் பொது மக்கள் பயப்படாமல் உடனடியாக 044 - 22200335 மற்றும் 9566184292 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றும், வனத்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.