வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட டிராக்டர்களில் புறப்பட்ட விவசாயிகளை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி காவல் துறையினர் கலைத்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த சட்டங்களைத் திரும்ப வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் ரெயில் மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

முக்கியமாக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தைக் கண்டித்து, அந்த சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி நோக்கி நேற்று காலை டிராக்டரிலும், நடந்தும் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

எதிர்ப்பு காரணமாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிடும் விதமாக டெல்லி சலோ போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்துகொண்டு வருகின்றன. 

இதன் காரணமாக ஹரியானா, டெல்லி எல்லைகளை இழுத்து மூடப்பட்டு சீல் வைத்து பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தி வருகின்றனர். 

குறிப்பாக, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய போலீசாருடன், ஆளில்லா விமானம் வழியேயும் போராட்டக்காரர்களை போலீசார் தீவிரமாகக் கண்காணிக்கும் பணியிலும் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில், வன்முறை நடைபெறாமலும், அது மேலும் பரவி விடாமல் தடுக்கும் முயற்சியாக, தலைநகர் நோக்கி வரும் விவசாயிகளைக் கலைந்து போக செய்யும் வகையில் டெல்லி போலீசாரின் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 

மேலும், அந்த வழியே போகும் வாகனங்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில், போலீசார் தீவிரமாக கண்காணித்து அனுப்பும் பணியிலும் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று ஹரியானா மாநில அம்பாலா பகுதி அருகே உள்ள சம்பு எல்லைப் பகுதியில் திரண்டு வந்த விவசாயிகளை, கலைந்து போக செய்வதற்காக போலீசார் கேட்டு கொண்டனர். அப்போது, அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால், போலீசார் தடுப்புக்காகப் போட்டிருந்த தடுப்பான்களை பாலத்தில் இருந்து விவசாயிகள் தூக்கி கீழே வீசினர். இதன் காரணமாக, பேரணியாக திரண்டு வந்த விவசாயிகள் மீது போலீசார் தண்ணீர் பாய்ச்சி அடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதே போன்று, டெல்லி செல்லும் வழியில் கர்னால் என்ற இடத்தில் விவசாயிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அந்த பகுதி வழியே டிராக்டரில் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை செல்ல விடாமல் சாலையில் தடுப்பான்கள் போட்டு, போலீசார் தடுத்தனர். இதன் காரணமாக பொது மக்களும், அந்த வழியே செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் இரவு வந்ததும், அங்குள்ள பானிபட் சுங்க சாவடியருகே படுத்து உறங்கினர். காலை எழுந்ததும் மீண்டும் 2 வது நாளாக இன்று தங்களது பேரணியை தொடர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து ஹரியானா மற்றும் டெல்லி இடையேயான சிங்கு எல்லை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், போலீசார் தடுப்பான்களுடன் சுருள்கம்பிகளை இணைத்து தடுப்புவேலி அமைத்து உள்ளனர். இது பார்ப்பதற்கே அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில், 2 வது நாளாக இன்று ஆயிரக் கணக்கான விவசாயிகள் நடந்தும், டிராக்டரிலும் தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக அணி வகுத்து சென்றனர். 

அப்போது, ஹரியானா - டெல்லி இடையேயான சிங்கு எல்லை பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். 

இதில், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சில விவசாயிகள் தடுப்புகளையும் தாண்டிச் செல்ல முயன்றனர். 

இதனால், ஆத்திரமடைந்த போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி பேரணியைக் கலைக்க முயன்று வருகின்றனர். இதனால், அந்த பகுதிகள் பார்ப்பது போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றன. இதனால், நாடு முழுவதும் உள்ள சக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் கடுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “விவசாயிகள் என் கடவுள்” என்று, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் சோனு சூட் டிவிட் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.