ஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

ஊழல் குறித்து கண்காணிக்கும் ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் நிறுவனம், ஆசியா நாடுகளில் நிலவும் லஞ்சம் ஊழல் குறித்து ஆய்வு ஒன்று நடத்தியது.

இந்தியா, தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அத்துடன், பல உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் தொழில் வளர்ச்சியும், தொழிற் நுட்ப வளர்ச்சியும் அடைந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தனி நபர் உள்ளிட்ட அனைத்து விதங்களிலும் பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக முன்னேற வேண்டும் என இலக்குடனும், இந்தியா வர்த்தகத்தைத் துவங்கும் சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான், ஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருப்பது உலக நாடுகளின் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அதன் படி, 17 நாடுகளில் சுமார் 20 ஆயிரம் நபர்களிடம் இந்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 17 ஆம் தேதி முதல், ஜூலை 17 வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 

அத்துடன், லஞ்சம் கொடுக்கும் 50 சதவீதம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில், 32 சதவீதம் பேர் “லஞ்சம் கொடுக்காவிட்டால் தங்களுக்கு ஆக வேண்டிய காரியம் நடக்காது” என்று, கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்த ஆய்வில், தனி நபருக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பெயர்களைப் பயன்படுத்தி அரசு மற்றும் பிற இடங்களில் காரியங்களைச் சாதித்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆய்வில் அதிகமாக இடம் பிடித்து உள்ளன. 

இதில், அவர்கள் கூறும் முக்கிய காரணம் என்ன வென்றால், “இப்படி, சிபாரினை நாங்கள் பயன்படுத்தாவிட்டால், எங்களுக்கான சேவையும் வேலையும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பது இல்லை” என்றும், கூறியுள்ளனர்.

இந்திய அரசுத் துறைகளில் லஞ்சம் அதிகளவில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம், “மெதுவான செயல்பாடு, கடுமையான நடைமுறைகள், தெளிவற்ற  வடிவு முறைகள் உள்ளிட்ட காரணமாக மக்கள் மாற்று வழிகளைத் தேடிச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்” என்றும், ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 

“இந்த லஞ்சம் என்பது, பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை சேவைக்கானது” என்பது தான், இதில் பெரும் பிரச்சனை என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அதன் படி, ஆசிய நாடுகளில் அதிகம் லஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. இந்தியாவின் பொதுத்துறையில் லஞ்சம் அதிகரித்திருப்பது இந்தியாவை சீரழிக்கும் என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த ஆய்வின் படி, இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் லஞ்சம் பெறும் மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால், அந்தந்த நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.