தாம்பத்திய உறவு பற்றி மனைவியுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாம்பத்திய உறவுக்கு மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்த 27 வயதான ராஜேந்திரன் என்ற இளைஞர், 25 வயதான தனது மனைவி திவ்யா கார்த்திகா உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்குக் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று உள்ளது.

கணவன் ராஜேந்திரன், அங்குள்ள நாயகன்புதூர் பகுதியில் மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வந்தார். இந்த புதுமண தம்பதியினருக்குத் திருமணம் ஆனது முதல் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், கணவன் - மனைவி இடையே தாம்பத்திய உறவில் மனக் கசப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கணவன் ராஜேந்திரன் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் தான், நேற்று நள்ளிரவு நேரத்தில் மனைவி திவ்யா கார்த்திகா உடன் நள்ளிரவு 12 மணி வரை, ராஜேந்திரம் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, கணவன் தனது மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்தார் என்றும், ஆனால் தாம்பத்திய உறவுக்கு மனைவி மறுத்ததால், அவர்கள் இருவருக்குள்ளும் அந்த நள்ளிரவு நேரத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், கூறப்படுகிறது.

இதனால், கடும் கோபம் அடைந்த கணவன் ராஜேந்திரன், மனைவியுடன் படுக்கையில் சென்று படிக்காமல், வீட்டின் ஹாலில் வந்து தனியாகப் படுத்துக் கொண்டார். ஆனால், நீண்ட நேரம் தூங்காமல் கண் விழித்தபடியே இருந்த அவர், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் படுக்கை அறைக்குச் சென்று, அங்கு நைலான் கயிறு மூலம் வீட்டு சீலிங்கில் உள்ள ஊக்கில் மாட்டி, தூக்கு மாட்டிக்கொண்டு, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கணவன் தற்கொலை செய்துகொண்டது தெரியாமல் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி காலை 7 மணிக்கு அவர் மனைவி திவ்யா எழுந்து உள்ளார்.

அப்போது, கணவன் ராஜேந்திரன் படுக்கை அறையில் தூக்கு மாட்டிக்கொண்ட நிலையில், சடலமாகத் தொங்கியதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். 

திவ்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

பின்னர், இது தொடர்பாகப் பேரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான், “தாம்பத்தியத்திற்கு மனைவி திவ்யா சம்மதிக்காத காரணத்தால், கணவன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது” தெரிய வந்தது. 

மேலும், ராஜேந்திரன் தற்கொலைக்கு முன்பாக அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.