உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் உடலை போலீசார் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த சிறுமி வீட்டில் இருந்து வந்தார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், சிறுமி சிறிது நேரம் வீட்டிற்கு வெளியே விளையாடி விட்டு, அதன் பிறகு பெற்றோர் வரும் வரை வீட்டில் தனியாக இருப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 6 ஆம் தேதி அன்று, 6 வயது சிறுமியைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் அங்குள்ள மதோ தாண்டா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, மறு நாள் 7 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் 6 வயது மதிக்கத் தக்க சிறுமி, கழுத்துப் பகுதியில் படுகாயங்களுடன் சடலமாக கிடப்பதாக அந்த பகுதி மக்கள் பார்த்து, அந்த பகுதி காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை பார்த்ததும், முதல் நாள் சிறுமியை காணவில்லை என்று புகார் அளித்த அந்த பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து விரைந்து வரச் சொல்லி தகவல் தெரிவித்து உள்ளனர். அதன் படியும், சிறுமியின் பெற்றோர் விரைந்து வந்து பார்த்து, கதறி அழுதனர். இதனால், அங்கு சடலமாக கிடந்தது முதல் நாள் மாயமான சிறுமி என்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, சிறுமியின் உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெய்பிரகாஷ் யாதவ், “சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை  செய்து, கழுத்தை நெரித்துக் கொன்று உள்ளதாக” தெரிவித்தார். 

மேலும், சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான், இந்த உண்மை தெரிய வந்ததாகவும்” அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், சிறுமியின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் கிடந்த செருப்பு, இந்த இளைஞனுடைய என்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இது தொடர்பாக, முன்னாள் மாநில அமைச்சர் ஹேம்ராஜ் வர்மா, சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அப்போது, “எங்கள் மகளின் உடலை பெற்றோராகிய எங்கள் அனுமதியின்றி வலுக்கட்டாயமாகத் தகனம் செய்ய காவல் துறையினர் முயன்றதாக” சிறுமியின் பெற்றோர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாக அந்த மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது, அந்த மாநில மக்களை கடும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.