சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து செம ஃபிட்டாக இருக்கிறார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணி கொண்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் சுசீந்திரன். ஈஸ்வரன் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்து ஒரு படம் ரிலீஸாகிறதா என்று தான் அனைவரும் வியப்பில் இருக்கிறார்கள்.

அப்படி அந்த ஈஸ்வரன் படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதை பார்த்துவிடும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் முன்பு வரை சிம்புவின் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு யாரும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று கூறிவிட்டார் சுசீந்திரன். மேலும் சிம்புவை பார்க்க ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்றார் சுசீந்திரன்.

இந்நிலையில் சிம்பு கேரவனில் இருந்து வெளியே வர அவரை பார்க்க கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. ஃபிட்டாக இருக்கும் சிம்புவை எத்தனை முறை பார்த்தாலும் போதவில்லை, மீண்டும் மீண்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

ஈஸ்வரன் படத்தை முடித்த பிறகு சிம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.