பீதியில் ஓபிஎஸ்.. கலக்கத்தில் இபிஎஸ்.. “புளியந்தோப்பு கட்டட விவகாரம்.. 2 அதிகாரிகளை சஸ்பெண்ட்!”

பீதியில் ஓபிஎஸ்.. கலக்கத்தில் இபிஎஸ்.. “புளியந்தோப்பு கட்டட விவகாரம்.. 2 அதிகாரிகளை சஸ்பெண்ட்!” - Daily news

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்று இருப்பதாக எழுந்த புகாரில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் கலக்கத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் குடியேறியவர்கள், “இந்த புதிய குடிசை மாற்று வாரியத்தின் வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அங்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை என்றும், கட்டடத்தில் விரிசல்கள், கழிவுநீர் உட்புகுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இருப்பதாகவும்” பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர்.

கிட்டதட்ட 250 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொட்டாலே உதிரும் நிலையில் காட்சி அளித்தன. இதையடுத்து, அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக, நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக சட்டசபையில் பேசிய சென்னை எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ. பரந்தாமன்,  “முன்னாள் துணை முதலமைச்சரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், கட்டட ஒப்பந்தக்காரர் உள்ளிட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தினார்.

இதனையடுத்து, குடியிருப்பின் தரத்தை ஆய்வு செய்யக் கோரி ஐ.ஐ.டி. குழுவுக்குத் தமிழக அரசு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளது.

மேலும், “இந்த கட்டுமான நிறுவனத்தை, பி.எஸ்.டி.எஸ். தென்னரசு என்பவர் நடத்தி வந்தார் என்றும், இவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய நண்பர்” என்றும், கூறப்படுகிறது. தென்னரசு, இபிஎஸுக்கு பினாமியாக இருந்தவர் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இபிஎஸ் - ஓபிஎஸ் மற்றும் அவர்களது தரப்பினர் அனைவரும் “அடுத்து என்ன நடக்குமோ?” என்று கலக்கத்தில் உள்ளதாகவும், அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் தான், சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்று இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் 2 பொறியாளர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment