பொது ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை
By Nivetha | Galatta | Sep 29, 2020, 05:02 pm
இந்தியாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் தினசரி பாதிப்பு அதிகரித்தாலும் இறப்பு விகிதம் குறைந்த அளவிலேயே உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு, அதே நேரத்தில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளையுடன் 8-ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையில் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தியேட்டர்கள் திறப்பது, பள்ளி- கல்லூரிகளை திறப்பது, தனியார் பேருந்து சேவை மற்றும் புறநகர் ரயில் சேவையை தொடங்குவது, உள்ளிட்டவை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இன்று (29/09/2020) காலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகல் 3 மணிக்கும் ஆலோசனை நடைபெறும் என சொல்லப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், 8 ஆம் கட்டமாக ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத சூழலிலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதம் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதைப் பின்பற்றி மாநில அரசுகளும் தளர்வுகளை அறிவிக்கின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறை ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் முன்பாகவும் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. அந்த வகையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படியே, இன்றும் ஆலோசனை செய்கிறார் முதல்வர். ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தளர்வுகளில் திரையரங்குள், புறநகர் ரெயில் சேவைகள் ஆகியவற்றிற்கு வரும் மாதம் அனுமதி அளிக்கப்படுமா? என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை செய்த முதல்வர், அதன் தொடர்ச்சியாக, முதல்வர் பழனிச்சாமி
* கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
* தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.7,800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
* கொரோனா சிகிச்சை மையங்களில் வசதிகள் சிறப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
* தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு அதிகரிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்.
* 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண அக்.1 முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பற்றி மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தியபிறகு முடிவு எடுக்கப்படும்.
ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்