கேரளாவில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவரை, திரைத்துறையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் சேர்ந்து அடித்து உதைத்து ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்த புரத்தைச் சேர்ந்த விஜய் நாயார் என்பவர், சொந்தமாக ஒரு யூடியுப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

அந்த வீடியோவில் கேரளாவில் இருக்கும் சில பெண் செயல்பாட்டாளர்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக பேசியும், அவர்களை விமர்சனம் செய்தும், அந்த வீடியோவை அவர் பதிவு செய்ததாகத் தெரிகிறது.

இந்த வீடியோவை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அந்த வீடியோவில் சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலஷ்மியையும் குறிப்பிட்டு, அவரைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்து கொதித்து எழுந்த சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலஷ்மி, அப்பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுடன் வந்து, அந்த பகுதியைச் சேர்ந்த காவல் துறை மற்றும் கேரள பெண்கள் அமைப்பு, சைபர் செல் போன்றவற்றிலும் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. 

இதன் காரணமாக, இன்னும் கோபமடைந்த சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலஷ்மி, தானே சம்மப்பட்ட நபருக்கு புத்தி புகட்ட நினைத்துள்ளார்.

அதன்படி, அப்பகுதியைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள் தியா, ஸ்ரீலட்சுமி ஆகியோருடன் சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலஷ்மி, நேராக வீடியோ பதிவிட்ட விஜய் நாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்ததாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, அந்த 3 பெண்களும் சேர்ந்து விஜய் நாயரை அடித்து கடுமையாகத் தாக்கி உள்ளனர். முக்கியமாக விஜய் நாயரின் முகத்தில் அந்த பெண்கள் கையோடு கொண்டு சென்ற கரியையும் பூசினர்.

அத்துடன், “ பதிவேற்றம் செய்த வீடியோவை அழிக்க வேண்டும் என்றும், பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், விஜய் நாயரை அந்த 3 பெண்களும் கடுமையாக மிரட்டி உள்ளனர். ஆனால், அதற்கு அவர் மசியவில்லை என்பதால், மீண்டும் அவரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். 

மேலும், விஜய் நாயரை 3 பேரும் சேர்ந்து தாக்கும் காட்சிகளையும், அவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துகொண்டே, தங்களது ஃபேஸ்புக் பக்கத்திலும் லைவ் செய்தனர். இதனால், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலானது. 

இந்த வீடியோவை பார்த்த சில ஆண்கள், பாதிக்கப்பட்ட விஜய் நாயருக்கு ஆதரவாக களம் இறங்கினர். இதனையடுத்து, விஜய் நாயர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், டப்பிங் கலைஞர் பாக்கியலஷ்மி உள்ளிட்ட 3 பேரும் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவமும், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டப்பிங் கலைஞர் பாக்கியலஷ்மி, “எங்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்த விஜய் நாயர் பற்றி நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தோம்” என்றும், தெரிவித்தார். இந்த சம்பவம், கேரளாவில் பெரும் வைரலாகி வருகிறது.