கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து, காய்கறிச் சந்தை திருமழிசையிலும், மாதவரத்தில் பழ மார்க்கெட்டும், வானகரத்தில் பூ மார்க்கெட்டும் செயல்பட்டுவந்தன. ஆனால், உரிய வசதிகள் இல்லாததால், கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்க வியாபாரிகள் வலியுறுத்திவந்தனர்.

அப்படியான சூழலில்தான், செப்டம்பர் 28-ம் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. அப்போது சி.எம்.டி.ஏ தரப்பில் பல்வேறு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, தினசரி இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்லவும், நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை வியாபாரிகள் வந்து செல்லவும் அனுமதியளிக்கப்பட்டது. காலை 9 மணிக்குச் சந்தை மூடப்பட்டு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, மாலை 6 மணிக்குத் திறக்கப்படும். முதற்கட்டமாக 194 பெரிய கடைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

கடைப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அனைத்துக் கடைகளிலும் வெப்பப் பரிசோதனைக் கருவி, கிருமிநாசினி போன்றவை கட்டாயம் இருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடைகளுக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், கடைகள் இருக்கும் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

சந்தைக்குள் முகக்கவசம் அணியாத நபர்கள் வெளியேற்றப்படுவார்கள், தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது. உள்ளே வரும் வாகனங்கள் கிருமிநாசினி தெளித்த பின்னரே உள்ளே வர அனுமதிக்கப்படுகிறது. பயணிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, சந்தை முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்படும்.

இப்படி அரசு பின்பற்றவேண்டிய பல்வேறு வழிமுறைகளை அறிவுறுத்தியிருந்தது. அதில் மிக முக்கிய விஷயங்களே முகக்கவசமும் தனிமனித இடைவெளியும்தான். அந்த இரண்டும் பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்படவில்லை. பலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது. இதனால், மீண்டும் கொரோனா பரவும் அச்சம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கடந்த 22 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

செப் 28 ம் தேதி, காய்கறி சந்தையில் 200 பெரிய மொத்த வியாபார கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ``சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கடந்த 22 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது மொத்தம் உள்ளவர்களில் 1.5 சதவீதமாகும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். மேலும் பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று இருக்கிறதா? என்று அந்தந்த மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தீவிரமாக கண்காணிக்கிறார்கள்" என்றார்.

சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது போன்றவை மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதால் அரசு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதை கடைபிடிக்க மறுப்பவர்களால் கொரோனா பரவுவது அதிகமாக வருகிறது.

இதனிடையே சென்னை கோயம்பேடு அனைத்து பழ வியாபாரிகள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.சீனிவாசன், பழக்கடை கே.ஜெயராமன், எம்.தியாகராஜன், த.மணிவண்ணன் உள்ளிட்டோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,

``கோயம்பேடு உணவு தானிய அங்காடி மற்றும் காய்கறி சந்தை முறையே கடந்த மாதம் 18 மற்றும் 28-ந்தேதிகளில் திறக்கப்பட்டது. பூ, பழ சந்தைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், சிறு வியாபாரிகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிறது.

இந்தநிலையில் கோயம்பேடு வியாபாரிகள் மூலம் மீண்டும் கொரோனா பரவுகிறது என்று உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருகிறது.. கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 22 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 சதவீதம் பேருக்கு அதாவது 40 முதல் 50 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் மார்க்கெட் வியாபாரிகள் அல்ல, மார்க்கெட்டுக்கு வந்து சென்ற வெளி வியாபாரிகள் என்பதே உண்மை. மார்க்கெட் வியாபாரிகளால் கொரோனா பரவவில்லை. தவறான தகவல்கள் மூலமாக வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாதவரம், திருமழிசையை விட கோயம்பேடு சந்தை மிக பாதுகாப்பாக உள்ளது. எனவே தவறான தகவல்களுக்கு செவிசாய்க்காமல் வியாபாரிகள்-தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி கோயம்பேடு சந்தையை முழுவதுமாக திறக்க தமிழக அரசும், சி.எம்.டி.ஏ. நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு வலியுறுத்தினர்.