தீராத ஆசையால் 3 மனைவிகள் இருக்கும் நிலையில் 4 வதாக திருமணம் செய்த கல்யாண மன்னனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

திருச்சி திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்த போலீஸ்காரர் மகாலிங்கத்தின் மகன் கார்த்திக் என்ற இளைஞர், அப்பகுதியில் தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 

இதனிடையே, கார்த்திக் என்ற இளைஞருக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் சிவகுமாரின் மகள் 20 வயதான சுமதிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு, கார்த்திக் - சுமதி தம்பதியினர் இருவரும், திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சுமதி கர்ப்பமானார். ஆனால், இதனைக் கேட்டு சந்தோஷப்படாமல் கணவன் கார்த்திக் சோகமடைந்து உள்ளார். 

அத்துடன், “கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி” தன் மனைவி சுமதியிடம் கார்த்திக் வலியுறுத்தி உள்ளார். ஆனால், மனைவி சுமதியோ கர்ப்பத்தை கலைக்கச் சரியான காரணத்தைக் கூறும்படி கணவனிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, மனைவி சுமதியின் நகைகளை கணவன் கார்த்திக், அடமானம் வைத்து அதை மறைக்கவும் முயன்றுள்ளார். இந்த விசயம் தெரிந்து மனைவி கேட்ட போது, கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரித்து உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவனின் செயல்பாடு மற்றும் அவரின் பேச்சு வார்த்தைகள் நிறைய மாற்றங்கள் இருந்துள்ளதைக் கவனித்த சுமதி, தன் கணவன் மீது சந்தேகப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, கணவனுக்குத் தெரியாமல் கணவரது செல்போனைப் ஆராய்ந்து பார்த்து உள்ளார். அப்போது, அதில் பல பெண்களுடன் கணவன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சுமதி, இது குறித்து தன் கணவன் கார்த்திக்கிடம் விசாரித்து உள்ளார். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, “திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணை கார்த்திக் முதலாவதாகத் திருமணம் செய்து கொண்டது” தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக, “சென்னையைச் சேர்ந்த வாணி என்ற பெண்ணை கார்த்திக் 2 வதாக திருமணம் செய்து கொண்டது” கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், “ 3 வதாக அதே பகுதியைச் சேர்ந்த மீனா என்ற பெண்ணையும் கார்த்திக் திருமணம் செய்துள்ளது” தெரிய வந்தது. ஆனால் இந்த 3 திருமணத்தையும் மறைத்துவிட்டு, 4 வதாக சுமதியை கார்த்திக் திருமணம் செய்து” இருக்கிறார்.  

குறிப்பாக, முதல் மனைவி ஸ்டெல்லாவிற்கு 3 வயது மகன் உள்ளார். 2 வது மனைவி வாணிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தையும்” உள்ள தகவலும் தெரிய வந்தது. இதனைக் கேட்டு தலை சுற்றிப் போய் நின்றார் 4 வது மனைவி சுமதி.

இதனையடுத்து, தன் கணவனின் இந்த மோசடி திருமணம் பற்றி தனது தந்தையும் கூறி கதறி அழுதிருக்கிறார் சுமதி. இதனையடுத்து, தந்தையார் கூறிய அறிவுரைப்படி அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய கணவனின் மோசடி திருமணம் குறித்து புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த லால்குடி போலீசார், இது தொடர்பாக கார்த்திக்கை கைது செய்து விசாரித்து உள்ளனர். இந்த விசாரணையில், தன் மீதான இந்த குற்றங்களை கார்த்திக் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் கார்த்திக்கை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.