திருமண வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, ஆசை ஆசையான வார்த்தைகள் கூறி இளம் பெண்களிடம் இருந்து நகை பறிக்கும் மேட்ரிமோனியல் மோசடி திருவண்ணாமலையில் அரங்கேறி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் என்ற இளைஞர், திருவண்ணாமலை செயல்பட்டு வரும் ஆக்சிஸ் தனியார் வங்கியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். 

தற்போது நிலவும் கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி சீக்கிரம் பணக்காரன் ஆக யோசித்த கார்த்திக் ராஜ், தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள பல பெண்களிடம் தமிழ் மேட்ரிமோனி திருமண தகவல் மைய இணையதளம் வாயிலாக தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு சம்மந்தப்பட்ட பெண்களிடம் ஆசை ஆசையான வார்த்தை கூறி, அந்த பெண்களின் மனதை மாற்றியதாகத் தெரிகிறது.

அதன்படி, பல பெண்களிடம் இருந்தும் சுமார் 50 சவரன் தங்க நகைகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை அடகு வைத்தும் விற்றும் மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருக்கிறார். 

அதன்படி, கோவை கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த பெண் ஒருவர், “திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர், என்னை ஏமாற்றிய 7 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததாக” அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும், பண கஷ்டம் கேட்டு மயக்கும் வார்த்தைகளைப் பேசி நாகைகளை வாங்கி அடமானம் வைத்த கார்த்திக் ராஜா, அவற்றைத் திருப்பித் தராததால், அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து, கார்த்திக் ராஜை தொடர்பு கொள்ள முயன்று உள்ளார். ஆனால், அந்த பெண்ணின் அழைப்பை முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், கோவை மாநகர சாய்பாபா காலணி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார், கார்த்திக் ராஜை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “கார்த்திக் ராஜ், கோவை பெண்ணிடம் ஏமாற்றி நகையைப் பெற்றுக்கொண்டு, அந்த நகைகளை பிரசாந்த் என்பவர் மூலமாக அடகு வைத்ததும், அதன் பிறகு அவற்றை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, கார்த்திக் ராஜ் நண்பன் பிரசாந்த் என்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜ், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கோவை, ராஜபாளையம், ஈரோடு, சிவகாசி, பொள்ளாச்சி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களிடம் ஏமாற்றியும், ஆசை ஆசையான வார்த்தைகளைப் பேசியும் நகைகளை ஏமாற்றி வாங்கியது தெரிய வந்தது.

இதனையடுத்து, மோசடி செய்தவரிடம் இருந்து தற்போது 100 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், மோசடி மன்னன்  கார்த்திக் ராஜ் என்ற இளைஞருக்கு உதவிய பலரும் சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.