விமான நிலையங்களைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதல் கட்டமாக லக்னௌ, ஆமதாபாத், ஜெய்ப்பூா், மங்களூரு, திருவனந்தபுரம், குவாஹாட்டி ஆகிய விமான நிலையங்களின் நிா்வாகத்தை தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

அந்த விமான நிலையங்களை நிா்வகிக்கும் உரிமையை ஏலம் வழியாக அதானி நிறுவனம் பெற்றது. பொது தனியாா் கூட்டு ஒத்துழைப்பின் கீழ் திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்களை அதானி நிறுவனத்துக்கு குத்தகை விடுவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

அதற்கு கேரள அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்தது. ஏலத்தில் மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனம் கலந்துகொண்டபோதிலும், குத்தகை உரிமையைப் பெறவில்லை.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்தின் பராமரிப்புக்கு 50 ஆண்டுகள் ஏலத்தில் ஒப்படைத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது.

'திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம்' எனக் கோரி, கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், 'திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு ஏலத்தில் ஒப்படைத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்' எனக் கடந்த வாரம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஒருநாள் மட்டும் கூடியது. அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், தீர்மானத்தைத் தாக்கல் செய்த பின்

``திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகள் குத்தகைக்கு அதானி குழுமத்துக்கு மத்திய அரசு ஏலத்தில் வழங்கிய முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும். விமான நிலையத்தில் பெரும்பகுதிப் பங்கு மாநில அரசுக்கு இருப்பதால், அதை அதானி குழுமத்துக்கு வழங்கக் கூடாது.
அதானி குழுமம் டெண்டரில் குறிப்பிட்டிருந்த அதே விலையை வழங்க கேரள அரசும் தயாராக இருக்கிறது. ஆனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது"

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில், ''மாநில அரசு கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை மாநிலத்தின் நலனுக்காக நாங்கள் ஆதரிக்கிறோம்'' என்றார். விவாதம் முடிந்த நிலையில் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கும் பா.ஜ.,வின் எம்.எல்.ஏ., ராஜகோபால், தனக்குப் பேச வாய்ப்பு வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தார்.