அழகான பெண்களை தேர்வு செய்து தேவதாசி முறையை இன்னும் சில கிராமங்கள் கடைபிடித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது வரை அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

முன்பு ஒரு காலத்தில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த தேவதாசி முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் இந்த தேவதாசி முறை முற்றிலுமாக மறைந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங்கின் தொகுதியில் தான், இன்று வரை தேவதாசி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. 

குறிப்பிட்ட அந்த கிராமத்தில், சுமார் 18 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, இதே கிராமத்தில் போலீசாரின் உதவியோடு சகி அறக்கட்டளையினர் அங்கு மொத்தம் 3 இளம் பெண்களை இந்த தேவதாசி முறையிலிருந்து அதிரடியாக மீட்டனர். 

மேலும், தேவதாசி முறைக்கு எதிரான ஆயுதமாக, அப்பகுதி மக்கள் கல்வி கடவுளின் பெயராலேயே இவ்வளவும் செய்து வருவதாகவும் கவலைத் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு முன்பு, அங்குள்ள கோயில்களில் தேவதாசி முறைக்கான சடங்குகள் நடைபெற்று வந்தன. கால மாற்றத்தில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சட்டப்படி, இந்த தேவதாசி முறை இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டது. ஆனால், அரசுக்குத் தெரியாமல் ஒரு சில இடங்களில் இப்படி மறைமுகமாக அரங்கேறிக்கொண்டு தான் வருகிறது. 

அதே நேரத்தில், இந்த கிராமத்தில், பக்கத்து ஊர்களில் இருப்பவர்களுக்குக் கூட தெரியாமல் வெளியாட்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கும் வகையில்,  அங்குள்ள சில வீடுகளிலேயே தேவதாசி முறைக்கான சடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த தேவதாசி முறைக்கு, அந்த கிராமத்தில் இருக்கும் மிக அழகான பெண்களைத் தேர்வு செய்து, அவர்களை இந்த தேவதாசி முறைக்கு அந்த கிராமத்து ஆண்கள் உட்படுத்துகின்றனர் என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

அத்துடன், மக்களின் படிப்பறிவின்மை இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன என்றும், கூறப்படுகிறது.

அந்த மாநிலத்தில் உள்ள சகி அறக்கட்டளையானது, தேவதாசி முறைக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. தேவதாசி முறைக்கு எதிரான போராட்டம், தேவதாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் மீட்கப்பட்டு அங்குள்ள தேவதாசி மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, “கல்வி கற்பிக்கப்பட்டால் தான் இந்த முறையை அடியோடு ஒழிக்க முடியும்” என்று, தேவதாசி மறுவாழ்வு மைய அலுவலர் கோபால் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள, அப்பகுதி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த சில முக்கிய ஆண்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அந்த மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.