கொரோனா காலத்தில் நாடு முழுவதும் 13,244 பாலியல் பலாத்கார புகார்கள் பதிவாகி உள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து உள்ளது. 

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, பல்வேறு கட்டங்களா ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டன.

இதன் காரணமாக, ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் தொடக்கம் மட்டும் குற்றங்கள் ஓரளவுக்கு மிகவும் குறைந்து காணப்பட்டன. ஆனால், மே மாதம் இறுதி வாரம் முதல் தற்போது வரை நாட்டில் நடைபெறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது, ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் பெரும் அளவில் அறிவிக்கப்பட்ட பின்பும், தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்னம் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு பெரும்பாலான மக்கள் திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 14 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில், பல முக்கிய மசோதாக்கள் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக, வேளாண் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிலையில், நாடாளுமன்ற மேலவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையின் அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இன்று அளித்து உள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தான், இந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, “கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை, இந்தியக் குழந்தைகள் தொண்டு அமைப்புக்குக் குழந்தைகள் பாலியல் வழக்குகள் தொடர்புடைய 3,941 தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், “கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்டு 31 ஆம் தேதி வரையில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்திற்குக் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய 420 வழக்குகளின் விவரங்கள் வந்துள்ளதாகவும்” சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

மேலும், “தேசிய சைபர் கிரைம் அறிவிப்பு வலைத்தளத்திற்கு உட்பட்ட குற்றங்களாகக் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 18 ஆம் தேதி வரையில் பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் தொடர்புடைய குற்ற வழக்குகள் மட்டும் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 244 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தேசிய குற்றப் பதிவுத் துறை தெரிவித்து உள்ளது” என்று, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்து உள்ளார்.

அதேபோல், “இந்தியாவில் சுமார் 29 சதவீதம் பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்றும், இந்தியாவில் நடைபெறும் மொத்த உயிரிழப்பில் 10 சதவீதம் பேர் புகைப்பழக்கத்தால் மரணிக்கும் கொடூரம் இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் ஆணவக்கொலை நடக்கிறதா என உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பியுள்ளார்.